AIRTELன் சாதனைக்கதை


அது 1976ம் ஆண்டு.  அப்போதுதான் தன் கல்லூரிப்படிப்பை முடித்திருந்த அந்த பத்தொன்பது வயது இளைஞனின் மனதில் தான் ஏதாவதொன்றை சாதிக்க வேண்டும், தன்னை இந்த உலகமே அறிய வேண்டுமென்ற இலட்சியமே குடிகொண்டிருந்தது. அவன் பெயர் சுனில் மிட்டல். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பிரபல அரசியல்வாதியின் மகனாகப்பிறந்திருந்தாலும் தந்தையின் நிழலிலன்றி தன்னுடைய பெயரை இவ்வுலகில் பதிக்கவேண்டுமென்ற வேட்கை அவனிடம் இருந்தது.அவன் வாழ்ந்த பஞ்சாபின் லூதியானா(Ludhiana) இல் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் வியாபார நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டனர்.அதனால் இவனுக்கும் வியாபாரத்தின்(Business) மீது ஆர்வம் வராமல் போகுமா? ஆனால் மற்றவர்கள் மேற்கொள்வது போல பெட்டிக்கடை வியாபாரத்தில் ஈடுபட வேண்டுமென்று அவன் நினைக்கவில்லை.

தான் விற்கும் பொருளை இந்தியாவிலுள்ள அனைவரும் வாங்க வேண்டும் என்பதே அவனது குறிக்கோளாக இருந்தது. தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஏதாவதொரு நிறுவனத்தில் சேரும்படியோ அல்லது பெட்றோல் பங்க், கேஸ் சிலிண்டர் நிரப்பு நிலையமொன்றை எடுத்துச் செய்யும்படியோ குடும்பத்தினர் கூறியபோது "நான் இப்படி சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு வரவில்லை" என அவர்களைப்பார்த்து தன் மனதுக்குள் குறும்புப்புன்னகையோடு அவன் கூறியது அவர்களுக்கு என்ன தெரிந்திருக்கவாப்போகிறது?.

தந்தையிடம் சிறுதொகை பணத்தை கடனாகப் பெற்ற சுனில் மிட்டல் 1976ல் லூதியானாவில் சைக்கிள் உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிறுவினார். அதில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் பஞ்சாப் மாநிலம் முழுவதும் விற்பனையாகின. அதில் வந்த இலாபத்தை கொண்டு தன் தந்தையின் கடனை சிறுகச்சிறுக அடைத்தார். கடந்த முறை Partnership முறையில் சைக்கிள் தொழிற்சாலையை ஆரம்பித்த மிட்டல் இந்த முறை தனியாகவே Steamless பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிறுவினார். பின்னர் நெசவு தொழிலிலும் கால்பதித்தார். இதிலெல்லாம் அவருக்கு நல்ல இலாபம் வரத்தொடங்கியது.

என்றாலும் அவருடைய வெற்றிப் பசிக்கு இவையெல்லாம் சரியான தீனியாக அமையாததால் காலப்போக்கில் இத்தொழில்கள் அவருக்கு சலிப்பை உண்டாக்கின. தன்னுடைய சாதனை பயணத்திற்கு பஞ்சாப் சரியான இடமில்லை என்பதை உணர்ந்த சுனில் மிட்டல் தான் வெற்றிகரமாக நடாத்திக்கொண்டிருந்த தொழிற்சாலைகள் அனைத்தையும் விற்று விட்டு 1980ல் மும்பைக்கு சென்றார். இது மற்ற எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்த போதிலும் தன் கனவை நோக்கி ஓடிய சுனில் மிட்டலுக்கு அதுவே சரியான முடிவாக இருந்தது. 

சென்றமுறை உற்பத்தித்துறையில் இறங்கிய சுனில் மிட்டல் இம்முறை விற்பனைத்துறையில் கால்பதிக்க தீர்மானித்தார். உற்பத்தித்துறையில் ஏற்படும் அதிக செலவீனமே இதற்கான காரணமாகும். கடந்த முறை சுனில் மிட்டலின் வெற்றியைக்கண்டுகொண்ட அவரது சகோதரர்களான ராகேஷ் மிட்டலும் ராஜன் மிட்டலும் இவரோடு இணைந்தனர். மூவரும் இணைந்து மும்பையில் 1980ம் ஆண்டு "Bharti Overseas Trading Corporation" என்ற இறக்குமதி நிறுவனத்தை தொடங்கினர். இந்தியாவில் எந்த பொருளுக்கு அதிக கேள்வி உள்ளது என்பதை ஆராய்ந்த மூவரும் இரும்புக்கு அதிக கேள்வி உள்ளதை அறிந்து இரும்பு இறக்குமதியில் ஈடுபட்டனர். பின்பு உலோகம், பிளாஸ்டிக் இறக்குமதியிலும் ஈடுபட்டனர். இறக்குமதித்துறையை இவரது சகோதரர்கள் கவனித்துக்கொள்ள விற்பனைத்துறையை இவர் பார்த்துக்கொண்டார். இறக்குமதி செய்யப்படும் பொருட்களை மும்பையின் பல கடைகளுக்கும் விற்பனை செய்ய இரவு, பகல் பாராது கடுமையாக போராடினார். இச் சந்தர்ப்பத்திலேயே சர்வதேச சந்தை, Marketing, Brand பற்றிய நல்லதொரு புரிதல் இவருக்கு ஏற்பட்டது. நல்ல இலாபம் வரத்தொடங்கியிருந்த சமயத்தில் அரசாங்கத்தின் வடிவில் அந்த பேரிடி வந்திறங்கியது. இந்தியாவில் இரும்பு இறக்குமதி செய்ய தடை என்ற அறிவிப்பை அரசாங்கம் அறிவித்தது.

இனி மும்பையில் இருப்பது பொருத்தமில்லை என்பதை உணர்ந்த மிட்டல் சகோதரர்கள் தம்முடைய நிறுவனத்தை டெல்லிக்கு இடம்மாற்றினர். டெல்லியில் அவர்களுக்கு சாதாரண அளவிலேயே வியாபாரம் நடைபெற்றது. அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனை சுனில் மிட்டலை குடைந்து கொண்டிருந்தது. ஒருநாள் டெல்லியில் ஒரு அங்காடியில் உட்கார்ந்திருந்த இவரின் கண்களில் அங்கு தவிப்போடு சுற்றிக் கொண்டிருந்த ஜப்பானியர் ஒருவர் தென்பட்டார். அவரை உற்றுநோக்கிய சுனில் மிட்டல் அவராகவே சென்று ஜப்பானியரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதோடு தான் இறக்குமதி தொழில் செய்வதையும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அந்த ஜப்பானியர் "தான் Suzuki நிறுவனத்தின் முகவர் என்றும் இந்தியாவில் Generatorகளை விற்பனை செய்ய வந்திருந்ததாகவும் ஆனால் தான் எதிர்பார்த்தபடி போதுமான அளவு வாடிக்கையாளரை பெற்றுக்கொள்ள முடியவில்லை" என கவலையோடு தெரிவித்தார். அந்த Generatorஐ ஆராய்ந்த சுனில் மிட்டலின் மூளையில் பொறி தட்டியது. "டீசலை ஊற்றினால் மின்சாரத்தை உற்பத்தி செய்து தரக் கூடியதை யார் வேண்டாம் எனக்கூறியது" என நினைத்தவர் இந்தியா போன்ற அடிக்கடி மின்தடங்கல் ஏற்படும் நாட்டிற்கு இது மிகவும் அவசியம் எனவும் எண்ணினார். தன் கையில் தங்கப்புதையல் கிடைத்து விட்டது என்பதை அறிந்த மிட்டல் தான் இவற்றை விற்றுத்தருவதாக கூறி உடனே புத்திசாலித்தனமான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். இந்தியாவில் Generatorகளை இறக்குமதி செய்வதற்கான முழு உரிமமும் தனக்கே வழங்கப்பட வேண்டும் என கூறி அதற்கான உடன்படிக்கையையும் Suzuki நிறுவனத்தோடு மேற்கொண்டார்.

விற்பனை அமோகமாக நடைபெற்று நல்ல இலாபம் வரத்தொடங்கி டெல்லி, மும்பை,கல்கத்தா, சென்னை போன்ற இடங்களில் புதிதாக கிளைகளை தொடங்கினார். எல்லாம் நல்லமுறையில் சென்று கொண்டிருக்கும்போது தான் மீண்டும் அரசாங்கத்தின் வடிவில் விதி விளையாடியது. இந்தியாவில் Generator இறக்குமதி தடை செய்யப்படுவதாக 1983ம் ஆண்டு அரசாங்கம் அறிவித்தது. வெற்றியின் உச்சத்தில் இருந்தவர் ஒரே இரவில் அடிமட்டத்திற்கு வந்து விட்டார். வேண்டுமானால் Generatorகளை இந்தியாவில் உற்பத்திசெய்து கொள்ளலாம் அதற்கான லைசென்ஸ்க்கு விண்ணப்பிக்கும்படி இந்திய அரசாங்கம் கூறி விட்டது. உடனே அதற்காக சுனில் மிட்டல் விண்ணப்பித்தபோதும் அதற்கான அனுமதி Yamaha and Birla குடும்பத்திற்கும் Honda and Shriram கூட்டணிக்கும் வழங்கப்பட்டது.

இவ்வாறான மிகப்பெரியதொரு தோல்வி அவருக்கு ஏற்பட்ட போதும் அவர் சோர்ந்துபோய் உட்கார்ந்து விடவில்லை. அடுத்து என்ன செய்வது என்பது பற்றி தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தார். நாடு நாடாகச்சென்று எந்தப்பொருளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து இந்தியாவின் நடுத்தர மக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் வழங்க முடியுமென ஆராய்ந்து கொண்டே இருந்தார். ஒரு முறை அவர் தாய்வான் நாட்டிற்கு வர்த்தக கண்காட்சிக்காக சென்றிருந்தபோது Push buttons land line phoneகள் அவருடைய கண்களில் பட்டன. அப்போது இந்தியாவில் Rottery dial phonesகளே பாவனையிலிருந்தன. அவற்றில் அழைப்பு எடுக்க வேண்டுமாயின் வட்டத்தில் விரலை விட்டு எண்களை சுழற்ற வேண்டும், அதேபோல் Redial optionsம் காணப்படவில்லை. ஆனால் Push buttons phoneல் எண்களை அழுத்த முடியும், Redial வசதி இருந்ததோடு தேவையானோரின் இலக்கங்களை பதிவு செய்யும் வசதியும் இருந்தது. அத்தோடு அது பார்ப்பதற்கு சிறியதாகவும், கவர்ச்சியானதாகவும் இருந்தது. உடனே Kingtel உற்பத்தி நிறுவனத்தோடு தொடர்புகொண்டு Push buttons phonesகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டார். இனி எல்லாம் சுபமாக அமையும் என்ற கனவோடு இந்தியா திரும்பியவருக்கு இந்தியாவின் இறக்குமதிச்சட்டம் அவரைப்பார்த்து பல்லிளித்துக்கொண்டிருந்தது.

Rottery phone 



Push button phone
                    
இந்திய இறக்குமதி சட்டத்தின்படி எந்த பொருளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யலாம் என்ற தரவில் இந்த Push button phoneகள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. சரியாக சொல்லப்போனால் இப்படி ஒரு Phone இருப்பதே இந்திய அரசாங்கத்திற்கு தெரியாதிருந்தது. அதேபோல் இன்னொரு சட்டத்தின் படி எந்த ஒரு பொருளையும் முழுமையாக பொருத்திய படி இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடியாது. மாறாக உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அதை இந்தியாவில் வைத்து பொருத்தி விற்பனை செய்யலாம். இதையறிந்த மிட்டல் உடனே Kingtel நிறுவனத்தை தொடர்புகொண்டு போன்களை மூன்று பாகங்களாக பிரித்து அவற்றை இந்தியாவின் மூன்று வெவ்வேறு நகரங்களில் இறக்குமதி செய்யும்படி வேண்டிக் கொண்டார்.

பொருட்கள் வந்திறங்கியவுடனே இவற்றை சேர்த்து லூதியானாவில் போன் உற்பத்திசெய்யும் தொழிற்சாலையை நிறுவினார். ஜேர்மனி நாட்டின் Siemens நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியோடு Beetel என்ற பெயரில் போன்களை உற்பத்தி செய்தார். Beetel போன்களின் Voice தரமானதாக இருந்தது. இதனால் இந்தியாவின் எல்லா அலுவலகங்களிலும், கடைகளிலும், வீடுகளிலும், Push button phoneகள் பயன்பாட்டிற்கு வந்தன. மேலும் அரச அலுவலகங்களில் கட்டாயம் Push button போன்கள் பயன்படுத்தப்பட வேண்டுமென இந்திய அரசாங்கம் உத்தரவிட்டதோடு அதற்கான Contractஐ Beetel இடமே வழங்கியது. இக்காலப்பகுதியிலேயே சுனில் மிட்டல் இந்தியாவில் Telephone answering machine, Wireless land line phone என்பவற்றை அறிமுகம் செய்ததோடு Fax இயந்திரங்களையும் இறக்குமதி செய்தார்.

அது சுனில் மிட்டலின் பொற்காலமென்றே கூற வேண்டும்.1990ம் ஆண்டே இந்தியாவில் Mobile phone கள் அறிமுகமாகின. இதனால் Mobile phoneகளுக்கான Network சேவையை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் வழங்குவதற்கான Tender அறிவிப்பு இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த Tenderக்காக அம்பானி சகோதரர்களின் ரிலையன்ஸ், டாடா போன்ற பெரிய நிறுவனங்களும் போட்டியில் குதித்தன. எல்லா நிறுவனங்களும் தமது செயற்திட்டங்களை வழங்கியபோது சுனில் மிட்டல் வழங்கிய செயற்திட்டத்தின் அடிப்படையில் அவருக்கே நான்கு நகரங்களிலும் Network சேவையை வழங்குவதற்கான உரிமத்தை இந்திய அரசாங்கம் வழங்கியது. சுனில் மிட்டலை மற்ற நிறுவனங்கள் யார் என்று அறிந்த ஒரு தருணமென்று அதை குறிப்பிடலாம்.

என்றாலும் அவை தமது பணபலம், அதிகாரபலம், ஆட்சிபலம் என்பவற்றைக் கொண்டு அடுத்த நாளே நான்கு நகரங்களுக்கல்ல ஒரு நகரத்துக்கு மட்டுமே அனுமதி தரமுடியும் என இந்திய அரசாங்கத்தை கூற வைத்து விட்டன. ஆனால் இதனால் சோர்ந்து போகாத சுனில் மிட்டல் டெல்லியிலே 1994ம் ஆண்டு Airtel நிறுவனத்தை ஆரம்பித்து அதற்கான டவரையும் நிறுவினார். ஆனால் சுனில் மிட்டல் எதிர்பார்த்ததை விட நான்கு மடங்கு செலவானது. தனக்கு ஒரு நகரத்திற்கு மட்டும் அனுமதி கிடைத்தது நல்லது என்றே அப்போது அவருக்கு தோன்றியது. தனது Airtel நிறுவனத்தை ஆரம்பித்தவுடன் அதை விளம்பரப்படுத்துவதற்காக நிறைய செலவிட்டதோடு Airtel sim அட்டைகளை இலகுவாக மக்கள் பெற்றுக்கொள்வதற்காக Airtel காட்சியறைகளில் மட்டும் வைக்காமல் சாதாரண பெட்டிக்கடைகளிலும் விற்கச்செய்தார். இதனால் எல்லா மக்களும் Airtel sim அட்டைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது.

மீண்டும் இரண்டாவதுமுறை Network Tenderக்கான அறிவிப்பு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது. இந்தமுறை முக்கிய நகரங்களுக்கான அனுமதியை அவருடைய போட்டி நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள இவருக்கு இமாச்சல பிரதேசத்திற்கான உரிமமே கிடைத்தது. போட்டி நிறுவனங்கள் இவரை கேலியாக பார்த்த போது கடந்தமுறை பெற்ற அனுபவத்தினால் இந்த நிறுவனங்கள் பெறப்போகும் அவஸ்தையை நினைத்து சுனில் மிட்டல் தனக்குள் சிரித்துக்கொண்டார்."போட்டி நிறுவனங்கள் Network  சேவையை வழங்க முடியாமல் தடுமாறி நிச்சயம் கைவிடும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் அவற்றை வாங்குவதற்கான முதலீடு தன்னிடம் இருக்க வேண்டும் என நினைத்த சுனில் மிட்டல் தன்னுடைய Airtel நிறுவனத்தின் இருபது வீதமான பங்குகளை இத்தாலியின் Telecom Italia நிறுவனத்திற்கும் இங்கிலாந்தின் British Telecom நிறுவனத்திற்கும் விற்பனை செய்தார்.

அவர் எதிர்பார்த்தபடியே போட்டி நிறுவனங்கள் Network சேவையை வழங்க முடியாமல் தம் நிறுவனங்களை விற்பனை செய்ய முன்வர அவற்றை உடனே வாங்கிய சுனில் மிட்டல் இந்தியா முழுவதும் Network சேவையை வழங்கும் தனிக்காட்டு ராஜாவாக மாறினார். அதேநேரத்தில் Network சேவையை வழங்குவதற்கான தொழில்நுட்பம் வெளிநாட்டு நிறுவனங்களினுடையதாகவே இருக்க வேண்டுமென இந்திய அரசாங்கம் அறிவித்தவுடன் சுவீடன் நாட்டின் Ericssion நிறுவனத்துடன் கலந்துரையாடினார். ஆனால் அம்முயற்சி வெற்றியடையாமல் போக பிரான்ஸ் நாட்டின் Vivendi நிறுவனத்தோடு இணைந்தார்.

அன்றைய காலத்தில் கையடக்க தொலைபேசிகள் பெரியதாகவும், மிக விலை உயர்ந்தவையாகவும் தொலைபேசி கட்டணங்கள் அதிகமாகவும் காணப்பட்டதோடு உள்வரும் அழைப்புகளுக்கும் கட்டணம் அறவிடப்பட்டது. இதனால் இந்திய மக்கள் கையடக்க தொலைபேசிகளை வாங்குவதில் ஆர்வம் குறைந்தவர்களாகவே இருந்தார்கள். என்றாலும் தன்னுடைய Airtel நிறுவனத்தை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டுமென நினைத்த சுனில் மிட்டல் குறைந்த விலையிலேயே தனது Network சேவையை வழங்கினார். இதனால் 1999ம் ஆண்டுவரை அவருக்கு நஷ்டமே ஏற்பட்டது.

2000ம் ஆண்டிற்குப்பின் கைத்தொலைபேசிகளின் புரட்சி ஏற்பட்டவுடன் சிறியதும், கவர்ச்சிகரமானதும், குறைந்த விலையிலுமான கையடக்க தொலைபேசிகள் அறிமுகமாகின. இதேநேரத்தில் இந்திய அரசாங்கம் உள்வரும் அழைப்புகள் முற்றிலும் இலவசம் என்று அறிவிப்பு செய்தது. இதனால் நடுத்தர மக்களும் கைத்தொலைபேசிகளை வாங்கி பாவிக்க தொடங்கியதால் Airtel simகளும் அதிகம் விற்பனையாகின. இதன் மூலம் சுனில் மிட்டல் அதிக இலாபத்தினை அடைந்தார். இடைப்பட்ட காலத்தில் பல நிறுவனங்கள் Network சேவையை வழங்கிய போதிலும் சிறந்த Phone coverage மற்றும் தரமான நுகர்வோர் சேவை (Customer Service)ஐ வழங்கியதன் மூலம் இந்தியாவின் முதல் தர சேவை வழங்குனராக Airtelஐ மாற்றினார்.

2009ம் ஆண்டு இலங்கையில் Airtel ஐ அறிமுகம் செய்த சுனில் மிட்டல் ஆபிரிக்காவில் மிகப்பெரிய Network சேவை வழங்குனரான Jain Telecom உடன் இணைந்தார். இதன்மூலம் உலகின் ஐந்து மிகப்பெரிய Network சேவை வழங்குனரில் ஒருவராக Airtel மாறியது. இலங்கை, பங்களாதேஷ், ஆபிரிக்கா, போன்ற நாடுகளில் 400 மில்லியன் வாடிக்கையாளர்கள்,25000 உத்தியோகத்தர்களோடு இயங்கும் Airtel நிறுவனமானது உலகின் 3வது மிகப்பெரிய Network சேவை வழங்கும் நிறுவனமாக காணப்படுகிறது. இந்தியாவில் முதன்முறையாக 4G இணைய சேவை, DTH cable TV தொழில்நுட்பம் போன்றவற்றை Airtel நிறுவனமே அறிமுகம் செய்தது.

Sunil Bharti Mittal

பல சவால்களைக்கடந்து Airtel நிறுவனத்தை ஆரம்பித்து சாதித்து காட்டிய சுனில் மிட்டலுக்கு 2007ம் ஆண்டு இந்தியாவின் "பத்மபூஷன்" விருது வழங்கப்பட்டதோடு, Telecom ஆசியா விருது விழாவில் "ஆசியாவின் சிறந்த Telecom நிர்வாக அதிகாரி" என்ற விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் "Bharathi Foundation" என்ற பெயரில் இந்தியா முழுவதும் 250 பள்ளிகளை ஆரம்பித்து ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்குகின்றார்."தான் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதை திறம்பட செய்யும் வரை ஓடி கொண்டிருப்பதே தனது வெற்றியின் இரகசியம்" என அவர் தெரிவித்துள்ளார். வெற்றிபெற முதலீடு அவசியமில்லை வித்தியாசமான அணுகுமுறைகளே அவசியம் என நிரூபித்து காட்டியுள்ள சுனில் மிட்டல் Business ஆரம்பிக்க இருப்பவர்களுக்கு மட்டுமின்றி எத்துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இவர் விளங்குகின்றார்.

ஆக்கம்:- M. R. அல்தாப் ஹசன்

                                                                                                            முற்றும். 


12 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post