தேடலே........அறிவின் ஆரம்பம்

 


எம் வாழ்க்கைக்கான அர்த்தத்தை தருவது எமது தேடலே. மனிதனிடம் ஏற்பட்ட தேடலே அவன் இன்று இவ்வளவு தூரம் தொழில்நுட்பத்திலும், அறிவிலும் முன்னேறி இருப்பதற்குக்காரணம். ஆக அறிவினதும், அதனால் ஏற்படும் மனத்திருப்தியினதும் ஆரம்பம் தேடல்தான் என்று கூறமுடியும். 

இன்று மற்ற உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக சிங்கப்பூரும், ஜப்பானும் சொல்லப்படுவதற்குக்காரணம் அந்நாடுகள் தமக்குள்ளேயே கேள்விகேட்டு, தம்மிடமிருந்த பலவீனங்களை ஆராய்ந்து நிவர்த்தி செய்ததனாலாகும்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் இரண்டு அணுகுண்டு வீச்சுக்களால் சிதைந்து போன ஜப்பான் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் சிலிர்த்தெழுந்து நிற்பதன் மிக முக்கிய அம்சம் அந்நாடு தன் வீழ்ச்சிக்கான காரணம் என்னவென தேடி ஆராய்ந்ததாகும். இதனாலேயே அது இயற்கை வளங்கள் குறைந்த நிலையிலும் தன்னிடம் உள்ள தொழில்நுட்ப அறிவின் காரணமாக கப்பலில் விவசாயம் செய்வதோடு ரோபோ தொழில்நுட்பத்தின் முன்னோடி நாடாகவும் திகழ்கின்றது. 

அதேபோல் சிங்கப்பூர் நாடானது நீர்வளமோ வேறெந்த இயற்கைவளமோ இன்றி மலேசியாவின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்து பின்னால் அந்நாட்டினாலேயே வேண்டாம் என்று தூக்கியெறியப்பட்ட பல்லின மக்கள் வாழ்ந்த ஒரு நாடாகும். ஆனால் சிங்கப்பூர் நாட்டின் சிற்பி "லீ குவான் யூ" வின் சிறந்த தலைமைத்துவத்தின் காரணமாக இன்று வருடாந்தம் அதிக சுற்றுலாப்பயணிகள் வருகைதரும் நகரங்களில் உலகளவில் ஐந்தாவது இடத்தையும் ஆசிய அளவில் இரண்டாவது இடத்தையும் பெறுகின்றது. மேலும் உலகில் குற்றங்கள் மிகக் குறைந்த நாடாகவும், தனிநபர் தலா வருமானம் அதிகம் கொண்ட நாடாகவும் அது திகழ்கின்றது.

நாம் நமது வாழ்வில் முன்னேற வேண்டுமாயின் முதலில் நமக்குள் தேடலை ஆரம்பிக்க வேண்டும். நமது பலம் என்ன, பலவீனம் என்ன, நமக்கான வாய்ப்புக்கள் என்ன, சவால்கள் என்னென்ன இருக்கின்றன என்பது பற்றி நாம் நமக்குள் கேள்வி கேட்டு ஆராய வேண்டும். அவ்வாறு செய்யும்போதே நமது பலவீனங்களைக்களைவதற்கும் பலங்களைக் கூட்டுவதற்கும் முடியுமாகி நம் வாழ்க்கையில் வெற்றி இலக்கை அடைய ஏதுவாயிருக்கும்.

நமக்குள் தேடல் இருக்கும்போதே நமது வாழ்வில் சுவாரஸ்யம் இருக்கும். "தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்" என்று பாடலில் குறிப்பிடுவதைப்போல நமது இலட்சியம் பற்றியும் அதை அடைந்து கொள்வதற்கான வாய்ப்புக்களைப் பற்றியும் விழிப்புணர்வோடு தேடிக்கொண்டே இருக்கும்போது எம் வாழ்வில் அர்த்தம் ஏற்படும். 

நாம் தேடலை விரிவுபடுத்தும் போதே எமது அறிவு அதிகரிக்க ஆரம்பிக்கும். எனவே அறிவை பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பம் "தேடல்" என்பது எமக்கு புலனாகிறது. ஆனால் அந்தத் தேடலை வெறுப்போடு மேற்கொள்ளாமல் ஒரு சுகமான அனுபவமாக நினைத்து மேற்கொள்ளவேண்டும். அப்படி நாம் மேற்கொள்வோமாயின் "பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே" என்ற பாட்டிற்கேற்ப எமது தேடலும் சுகமான ஒரு அனுபவமாக அமையும்.


 

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post