Lascarins என்பவர்கள் யார்?


போர்த்துக்கேயர் காலத்தில் போர்த்துக்கேயர் சார்பாக சண்டையிட்ட இலங்கையை சேர்ந்த சுதேச படையினரை குறிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பாவனை சொல்லே "Lascarins" என்பதாகும். அவர்கள் போர்த்துக்கேயர் காலத்தில் மட்டுமின்றி 1930வரை அந்தந்த கால ஆட்சியாளர்களின் காலனித்துவ படையினராகவும் செயற்பட்டனர். இவர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களின் படையினராக செயற்பட்டது மட்டுமின்றி உள்நாட்டு இராச்சியங்களின் யுத்தங்கள் வெற்றிபெறவும் பங்காற்றினர்.

"Lascarin" "லஸ்கரின்" என்ற வார்த்தையானது பாரசீக மொழியில் "இராணுவ முகாம்" அல்லது "இராணுவம்" என்ற அர்த்தத்தை தரும் "Lascar" என்ற சொல்லிலிருந்தும் அரபு மொழியில் "படைவீரன்" என்ற அர்த்தத்தை தரும் "Askari" என்ற சொல்லிலிருந்தும் மருவி வந்ததாகும்.

போர்த்துக்கேயர் "Lasquarim" அல்லது "Lascarim" என்ற வார்த்தையை ஆசியாவை சேர்ந்த "இராணுவவீரன்" அல்லது "கடற்படைவீரன்" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தினர். பின்னர் அச்சொல்லே ஆங்கில மொழியில் "Lascar" என பயன்படுத்தப்பட்டது. இலங்கையில் இராணுவத்தை குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு பரிபாஷை சொல்லாக பயன்படுத்தப்பட்டது.

1505ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் முதலில் இலங்கையில் வந்திறங்கியபின் 1517 ஆம் ஆண்டு கொழும்பில் தமக்கென ஒரு கோட்டையை அமைத்தனர். இதன்மூலம் அவர்களுக்கு இலங்கையின் உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு வியாபார நடவடிக்கைகளை கண்காணித்து கட்டுப்படுத்த கூடியதாக இருந்தது. 

1521ஆம் ஆண்டு இடம்பெற்ற "Wijayaba Kollaya" வரலாற்றுச்சம்பவத்தின் பின் இலங்கையின் உள்நாட்டு இராச்சியங்களின் உள்விவகாரங்களிலும், முரண்பாடுகளிலும் தலையிடத்தொடங்கினர்.

ஆனால் போர்த்துக்கேயரிடம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஆளணிவளமே காணப்பட்டதனால், அவர்கள் தம்மை பாதுகாக்கவும், கோட்டை இராச்சியத்தின் தேவைகளை நிறைவேற்றவும், தாக்குதல் நடவடிக்கைகளில் தமக்கு உதவுவதற்காகவும் இலங்கையின் சுதேச மக்களை கொண்டு படையொன்றை அமைத்தனர். அந்த படையணியே "Lascarins" என அழைக்கப்பட்டது.

அந்த படையணியிலிருந்த பெரும்பான்மையானோர் இலங்கையின் கரவா, கரையர், நாயர் மக்கள் பிரிவுகளிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களாக இருந்தார்கள். இக்காலப் பகுதியிலேயே இலங்கையில் இருந்த உயர் வர்க்கத்தை சேர்ந்த பல உறுப்பினர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம்மாறி கொண்டிருந்தனர்.

போர்த்துக்கேயர் இலங்கையில் இருந்த உள்ளூர் இராச்சியங்கள் மீது குறிப்பாக கோட்டை இராச்சியத்தின் மீது தமது நேரடி கட்டுப்பாட்டை செலுத்த தொடங்கிய பின் கோட்டை இராசதானியின் மன்னனுக்கு விசுவாசமாக இருந்த படையினர் "Lascarins" ஆக மாறியதோடு அவர்கள் தமது திறமைகளுக்கேற்ப முதலியார், முகாந்திரம், அராச்சி அல்லது கங்காணி என்ற படித்தரங்களில் இருந்தனர்.

"Lascarins" கள் காலனித்துவ போர்த்துக்கேய படையினருக்கு மிக முக்கியமான உதவியாக இருந்தனர். அதிலும் குறிப்பாக உள்நாட்டு இராச்சியங்களின் மன்னர்களோடு இடம்பெற்ற போர்களில் இவர்களுடைய பங்களிப்பு போர்த்துக்கேயர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமைந்திருந்தது. ஏனெனில் இலங்கையின் புவியியல் அமைப்பை இவர்கள் நன்கு அறிந்தவர்களாக இருந்ததே அதற்கு காரணமாகும்.

போர்த்துக்கேயர் இலங்கையில் ஆரம்பத்தில் பங்குபற்றிய அதிகமான யுத்தங்களில் பெரும்பான்மையாக "Lascarins"களே இருந்தார்கள். ஆனால் போர்த்துக்கேயர் உள்நாட்டு இராச்சிய மன்னர்களுக்கு எதிராக கலந்துகொண்ட யுத்தங்களில் போர்த்துக்கேயரின் யாழ்ப்பாண இராச்சிய வெற்றியை தவிர ஏனைய பல சந்தர்ப்பங்களில் ஆரம்பத்தில் போத்துக்கேயர் சார்பாக கலந்துகொண்டு இறுதி நேரத்தில் உள்நாட்டு மன்னர்கள் சார்பாக பக்கம் மாறி போரிட்டனர்.

1594 ஆம் ஆண்டு இடம்பெற்ற "தந்துரே" போரிலும் "ரந்தெனிவல" போரிலும் பெரும்பான்மையான"Lascarins" படையினர் முதலாம் விமலதர்மசூரியன் பக்கம் சாய்ந்ததால் அவரின் படையின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. அதேபோல் 1603 ஆம் ஆண்டு சிங்கள படையினருக்கும் போர்த்துக்கேய படையினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதியான மிகப் பெரிய யுத்தமான "கண்ணொருவ" யுத்தத்திலும் மற்றொரு யுத்தத்திலும் "Lascarins" படையினர் ஒட்டுமொத்தமாக சிங்கள படையினரின் பக்கம் சாய்ந்தனர். 

இதன் காரணமாக போர்த்துக்கேயர் தமது பிற்பட்ட காலங்களில் தாம் பங்குபற்றிய பெரும்பாலான போர்களில் இந்திய,ஆபிரிக்க, மற்றும் மலே படையினரையே அதிகம் சார்ந்திருந்தனர். போர்த்துக்கேயரை இலங்கையின் கரையோரங்களில் இருந்து வெளியேற்றுவதற்காக ஒல்லாந்தரோடு இடம்பெற்ற யுத்தத்தில் "Lascarins" இரண்டு பக்கமும் சேர்ந்துகொண்டு சண்டையிட்டனர்.

ஒல்லாந்தரின் காலப்பகுதியில்(1640-1796) "Lascarins"கள் "Ranchus" என்ற குழுக்களாக பிரிக்கப்பட்டதோடு ஒவ்வொரு குழுவும் முகாந்திரம்,அராச்சி அல்லது கங்காணி என்ற இரண்டு அல்லது மூன்று உயர் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டன. பெரும்பாலான "Ranchus" கள் முதலியார் என்பவரின் கீழ் செயற்பட்டன.

ஆங்கிலேயரின் காலத்தில் "Lascarins"கள் படையினர் என்ற அந்தஸ்தை இழந்து அரச விழாக்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுபவர்களாக செயற்பட்டனர். பிரித்தானிய ஆளுநர் "Lascarins" படைபிரிவில் "Ganganis" உள்ளிட்ட ஒரு பிரிவை மாத்திரம் சம்பளமும்,ஓய்வூதியமும் வழங்கி தொடர்ந்தும் தக்கவைத்திருந்தார். பிரித்தானிய அரச குடும்பத்தினர் இலங்கைக்கு விஜயம் செய்யும்போதும் மாலைத்தீவு அரச தூதுக்குழுவினர் இலங்கை ஆளுநரை சந்திக்க வரும் போதும் அவர்கள் மரியாதை காவலர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அன்றைய காலத்திலிருந்த முதலியார்கள் தம்முடைய தற்பாதுகாப்பிற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அனுமதியோடு "Lascarins"களில் சிறியதொரு குழுவை தம்மோடு வைத்திருந்தனர். 1930களில் முதலியார் என்ற பதவி இல்லாமலாக்கப்பட்டபோது "Lascarins"களை சேவையில் ஈடுபடுத்துவதும் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது. என்றாலும் 1954ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவரை மரியாதை நிமித்தமாக காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட "Lascarins" விசேட நிகழ்வுகளின் போது அவற்றின் கடமைகளுக்காக சில வருடங்கள் பயன்படுத்தப்பட்டனர்.

ஆக்கம்:- அல்தாப் ஹசன்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post