வரலாறு எமக்கு மறைந்த அரசியல் தலைவர்கள் செய்த சாதனைகளை அறியத் தருகின்றது.
ஆனால் இவர்களது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமாகவோ அல்லது பொழுதுபோக்குகள் பற்றியோ போதுமான தகவல்கள் எமக்கு கிடைப்பதில்லை.
நாம் அவர்களது சுயசரிதைகளை பொறுமையாக இருந்து வாசிக்கும் போதே எமக்கு அது பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
எமக்கு இலங்கை என்ற திருநாட்டை பெற்றுக் கொள்வதற்கு அடித்தளமாக செயற்பட்ட இத்தலைவர்கள் தமது ஓய்வு நேரங்களை எவ்வாறான விடயங்களில் ஈடுபட்டு செலவழித்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் எமக்கு மிக அரிதாகவே கிடைக்கின்றன.
நாம் இக்கட்டுரையிலே கடந்த காலங்களில் வாழ்ந்து மறைந்த பிரபலமான அரசியல் தலைவர்களின் அரசியல்ரீதியற்ற குதூகலமான பொழுதுபோக்குகள் பற்றி பார்க்க இருக்கின்றோம்.
01.D.S. சேனாநாயக்க
இலங்கையின் "தேசதந்தை" என வர்ணிக்கப்படும் Don Stephen Senanayake இலங்கை சுதந்திரம் அடைவதற்கு வழியமைத்தவராகவும் சுதந்திர இலங்கையின் முதல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை தோற்றுவித்தவராகவும் கருதப்படுவதோடு இலங்கையின் முதல் பிரதம மந்திரியாகவும் நியமிக்கப்பட்டார்.
இவர் தனது பாடசாலைக் காலங்களில் படிப்பில் அவ்வளவாக ஆர்வம் செலுத்தாதவராக இருந்ததோடு அதற்கு மாறாக விளையாட்டிலேயே கூடிய விருப்பம் உள்ளவராக இருந்தார்.
புனித தோமஸ் கல்லூரியில் கல்வி கற்ற சேனாநாயக்க மல்யுத்த விளையாட்டில் ஈடுபட்டதோடு கிரிக்கெட் விளையாட்டிலும் பங்குபற்றினார்.
இவர் பாரம்பரிய புகழ்மிக்க ரோயல் கல்லூரி-புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் விளையாடியதோடு பிற்காலத்தில் Sinhalese Sports Club(SSC) மற்றும் Nondescripts Cricket Club (NCC) கழகங்களுக்காகவும் விளையாடினார்.
D.S. சேனாநாயக்க குதிரை சவாரியிலும் விருப்பத்தோடும் திறமையோடும் ஈடுபடகூடியவர்.
சொல்லப்போனால் அவர் 1952ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் பொலிஸ் தலைமை அதிகாரி ரிச்சட் அலுவிகாரே மற்றும் அமைச்சரவை அமைச்சர் பொன்னம்பலம் ஆகியோருடன் குதிரை சவாரியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதுதான் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு குதிரையில் இருந்து தவறி விழுந்ததால், உடனே அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சில மணித்தியாலங்களின் பின் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அன்று நடந்த சம்பவம் பற்றி D.S. சேனாநாயக்கவுக்கு பின்னால் சில அடி தூரம் மற்றொரு குதிரையில் சவாரிசெய்து வந்துகொண்டிருந்த அலுவிகாரே கூறும்போது "பிரதமர் ஏதோ வித்தியாசமான முறையில் சொல்லிக்கொண்டு குதிரையிலிருந்து விழுந்ததை தான் கண்டதாக அவர் தெரிவித்தார்".
இங்கு வித்தியாசமான முறையில் என குறிப்பிட காரணம் பிரதமர் அந்தளவு தூரம் குதிரை சவாரியில் தேர்ச்சி பெற்றவராக இருந்தமையாகும்.
02.டட்லி சேனாநாயக்க
தந்தையான D.S. சேனாநாயக்கவின் திடீர் மரணத்திற்கு பின் 1952-ஆம் ஆண்டு இலங்கையின் இரண்டாவது பிரதமராக பதவியேற்ற டட்லி சேனாநாயக்க அவர்கள் தான் பாடசாலையில் கல்விகற்ற காலங்களில் படிப்பிலும், விளையாட்டிலும் திறமையானவராக சிறந்து விளங்கினார்.
மேலும் அவர் தான் கல்வி கற்ற கல்லூரியில் Hockey, Boxing மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் பல விருதுகளையும், கிண்ணங்களையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
பிற்பட்ட காலங்களில் அவருக்கு Golf மற்றும் புகைப்படமெடுத்தல் என்பவற்றில் ஆர்வம் ஏற்பட்டது.
டட்லி அவர்கள் Golf மைதானத்திற்கு தனது வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது அவரை ஒரு பொலிஸ் அதிகாரி தடுத்து நிறுத்தி அவரது தவறை சுட்டிக்காட்டியபோது தன் தவறை அவர் ஏற்றுக்கொண்டது அவர் எந்தளவு தூரம் பண்புடையவர்,இளகியமனம் படைத்தவர் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் என அடிக்கடி இக்கதை அவரைப் பற்றி கூறப்படுகின்றது.
அவர் விவசாய மற்றும் காணி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இலங்கையின் கிராமப்புற பகுதிகளில் தன் தோளில் கேமராவை தொங்க விட்டுக் கொண்டு நடமாடி திரியும் டட்லி சேனாநாயக்க அவர்களை அடிக்கடி காணமுடியும்.
இசையிலும்,வாசிப்பிலும் அதிக விருப்பத்துடன் இருந்த டட்லி சேனாநாயக்க அவர்கள் சாப்பிடுவதிலும் பெரும் வேட்கையுடையவராக இருந்ததாக சொல்லப்படுகின்றது.
03.S.W.R.D. பண்டாரநாயக்க
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்று இலங்கை சுதந்திர கட்சியை ஸ்தாபித்த பண்டாரநாயக்க கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் போட்டிகளில் அதிக ஆர்வமுடையவராக இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதேபோல் புகைப்படம் எடுத்தல்,இசை,வாசித்தல் மற்றும் எழுதுவதிலும் அதிக ஆர்வமுடையவராக இருந்தாராம். அவர் தனது தாய் கல்வி நிலையமான புனித தோமஸ் கல்லூரிக்காக கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் விளையாட்டுகளில் பங்குபற்றியுள்ளதோடு தனது தனிப்பட்ட விருப்பங்களாக புகைப்படம் எடுத்தல்,இசை மற்றும் வாசிப்பை மேற்கொண்டார்.
அவரின் எழுத்தாற்றலை பற்றிப் பார்ப்போமேயானால் ஆறு வருடங்கள் இலண்டன் ஒக்ஸ்போர்டு கல்லூரியில் கற்றுவிட்டு 1925ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய பண்டாரநாயக்க அவர்கள் ஜே.விஜயதுங்க என்பவரோடு இணைந்து "Island Review" என்ற நூலை இயற்றினார். அதேபோல் 1926ஆம் ஆண்டு "கண்டி பெரஹரா" என்ற நூலையும் வெளியிட்டார்.
04.சேர் ஜோன் கொத்தலாவல
சுதந்திர இலங்கையின் மூன்றாவது பிரதமரான இவர் இராணுவத்தில் இவர் காட்டிய வீரதீர செயல்களுக்காக புகழப்பட்டார். இவர் 1922 ஆம் ஆண்டு இரண்டாம் லெப்டினன்ட் ஆக இருந்து 1933ஆம் ஆண்டு மேஜர் தரத்திற்கு உயர்ந்தார்.
அதேபோல் இவர் ஒன்றுகூடல்கள், விழாக்களில் அதிக ஆர்வமாக இருப்பது பற்றியும் Kandawalaலுள்ள தனது வீட்டில் அடிக்கடி பார்ட்டிகளும், கேளிக்கை விருந்துகளும் ஏற்பாடு செய்வது பற்றியும் அதிகம் அறியப்பட்டிருந்தார்.
1955ஆம் ஆண்டு கொத்தலாவல அவர்கள் தனது வீட்டில் விருந்தொன்றை ஏற்பாடு செய்து இருந்ததாகவும் அதிலே இளம் மாட்டுகன்றொன்று வறுக்கப்பட்டதாகவும் செய்தியொன்று பரவ அது பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1955ஆம் ஆண்டு என்பது கௌதம புத்தர் மரணித்து 2500வது ஆண்டு ஞாபகார்த்ததினம் கொண்டாடப்பட்டு ஆன்மீக ரீதியான உணர்வுகள் உச்சம் பெற்றிருந்த ஒரு காலப்பகுதியாகும்.
அப்படியான ஒரு நேரத்தில் இவ்வாறானதொரு சம்பவம் நிகழ்ந்தது கவலைக்குரியதொரு நிகழ்வாகவே அப்போது கருதப்பட்டது.
ஜோன் கொத்தலாவலயும் ஐக்கிய தேசிய கட்சியின் ஏனைய அங்கத்தவர்களும் பண்டாரநாயக்கவால் மேற்கின் அடிவருடிகள் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
ஏனெனில் அவர்கள் இலங்கை நாட்டில் வாழும் பாரம்பரிய சிங்கள மொழி பேசும் மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுபவர்களாக இருந்தமையாலாகும்.
ஜோன் கொத்தலாவல பகிரங்கமாக Jodhpur காற்சட்டை அணிபவராக இருந்ததும் தனது விருந்துபசாரங்களில் நடனம் ஆடுவதற்காக மத்திய கிழக்கிலிருந்து கவர்ச்சியான நடன பெண்களை கொண்டுவந்ததும் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வி அடைவதற்கு மிக முக்கிய காரணங்களாக அமைந்தன என்று கூறலாம்.
இக் காலப்பகுதியில் வெளிவந்த அரசியல் கார்ட்டூன் சித்திரமான "Mara Yuddhaya" அந்நாட்களில் மிகப் பிரபலமாக பேசப்பட்டது.
அக்கார்ட்டூனில் யானையொன்றை பின் தொடர்ந்து வரும் மதுபோதையிலுள்ள ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் அரச மரத்தின் கீழ் உள்ள சமாதியில் அமர்ந்திருக்கும் புத்தரை தொந்தரவு செய்வது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் ஜோன் கொத்தலாவலவின் விருந்துபசாரத்தில் கன்றுக்குட்டியொன்றை வறுத்துண்டதையும் கூட கார்ட்டூனில் சித்தரித்து வெளியிட்டனர்.
05.J.R. ஜெயவர்தன
இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதியாக 1976-1989 வரை பதவிவகித்த J.R. அவர்கள் இலங்கையில் முதலில் அரசியல் யாப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தியவராக கருதப்படுகின்றார்.
J.R. கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்கின்ற காலத்தில் கல்வி, விளையாட்டு இரண்டிலும் திறமைமிக்கவராக இருந்தார்.
1925ம் ஆண்டு றோயல் கல்லூரி-புனித தோமஸ் கல்லூரிகளுக்கிடையிலான தன் கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்ட J.R. பிற்காலத்தில் வருடாந்தம் நடைபெறும் றோயல்-டிரினிட்டி கல்லூரிகளுக்கிடையிலான றக்பி அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.
1926ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம்,லத்தீன்,Logic, மற்றும் பொருளியல் பாடங்களில் தன் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த போதிலும் விளையாட்டுக்களிலும் கூட அதிக ஆர்வமுடையவராகவே செயற்பட்டார்.
J.R. வாசிப்பதிலும் கூட மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். அவருடைய மகனான Ravi Jayawerdena ஒரு பேட்டியில் குறிப்பிடும் போது "தன் தந்தை பல்வேறுபட்ட தலைப்புக்களில் வாசிப்பதற்காக பலமணி நேரங்களை செலவளிப்பார்" என்று கூறினார்.
மேலும் "நீ வயது முதிர்ந்த காலத்தில் ஒரு வாசிப்பாளனாக இருந்தால் ஒரு போதும் நீ தனிமையை உணரமாட்டாய்" எனக்கூறி தன் மகனுக்கும் வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறியுள்ளார்.
1996ம் ஆண்டு J.R.ஜெயவர்தன மரணித்தபோது கூட General Pattonன் சுயசரிதையை வாசித்துக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
06.ரணசிங்ஹ பிரேமதாச
இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக செயற்பட்டவரும், இலங்கையின் அதியுயர் விருதான "Sri Lankabimanaya" விருதை 1986ம் ஆண்டு பெற்றவருமான பிரேமதாச அவர்கள் தன் வாழ்நாளின் பெரும்பாலான பகுதியை சமூக சேவைகளுக்காகவே அர்ப்பணித்தார்.
R.பிரேமதாச அவர்கள் தன் இளம் வயதில் "Sri Sucharitha" என்றொரு தொண்டர் அமைப்பை ஸ்தாபித்தார்.
அவ் அமைப்பானது கொழும்பின் குடிசைப்பகுதிகளில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதார,சமூக, மற்றும் ஆன்மீகரீதியான முன்னேற்றத்திற்காக செயற்பட்ட அமைப்பாகும்.
மேலும் இப்பகுதிகளில் சமூக அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்ததோடு இவ்திட்டங்களில் போதைபாவனை,புகைப்பாவனை,சூதாட்டம் போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்காக வேண்டி இவ்அமைப்பில் இணைந்துகொண்ட இளைஞர்,யுவதிகளைக்கொண்டு தனது திட்டங்களை நடைமுறைப்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தினார்.
அவர் தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் கூட நலிந்த மக்களை முன்னேற்றுவதற்காக பாடுபட்டார்.
மறுபறத்தில் R.பிரேமதாச அவர்கள் சிறந்ததொரு கவிஞராகவும், தேர்ந்தமுறையில் கவிதை எழுதக்கூடியவராகவும் இருந்தார்.
1985ம் ஆண்டு "கொழும்பு இளம் கவிஞர் அமைப்பு" தனது 50வது வருட பூர்த்தியை கொண்டாடிய போது R.பிரேமதாச அவர்களும் அதில் பங்குகொண்டதோடு பிரபல்யமான கவிதையொன்றையும் வாசித்தார்.
"நான்கு வரிகளாலான சொற்களை எழுதிவிட்டதால் யாரும் கவிஞனாகி விட முடியாது. ஒரு கவிஞனென்பவன் நல்ல மனித பண்புகளாலான வளமானதொரு கற்பனைவளத்தை கொண்டவனாக இருக்க வேண்டும்.அவ்வாறானவனே தன்னை ஒரு கவிஞனென கூறமுடியும்"
என்பதே அவர் அந்நிகழ்வில் பாடிய கவிவரிகளாகும்.
R.பிரேமதாசவால் இயற்றப்பட்ட இக்கவிதை வரிகள் பின்னாட்களில் பல பிரபல்யமான சிங்கள பாடல்களில் உள்ளடக்கப்பட்டன.
ஆக்கம்:-அல்தாப் ஹசன்
மூலம்:-Roar Media





