இலங்கை வரலாற்றில் பிரபல்யமான காதல் கதைகள்

 1.விஜயன்-குவேனி


இலங்கை வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட முதலாவது காதல் கதை இதுவாகும்.
 
அத்தோடு இலங்கை தீவின் முதல் மன்னனாகவும் விஜயனே கருதப்படுகின்றான். 
இங்கு நாம் "பதிவுசெய்யப்பட்ட" என்ற வார்த்தையை பாவிப்பதற்கான காரணம் இலங்கையின் வரலாற்றை ஆரம்பம் முதல் அறிவதற்கு இருக்கின்ற மிக ஆரம்ப மூலம் மகாவம்சம் ஆகும். 

அதிலே இலங்கை வரலாற்றில் உள்ள மன்னர்களது கதைகளும் அவர்களது வரலாறு, சாதனை என்பன பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்தியாவை சேர்ந்த இளவரசனான விஜயன் தன்னுடைய மோசமான நடத்தையின் காரணமாக தனது தந்தையினால் தன் நண்பர்கள் 700 பேருடன் சேர்ந்து கப்பலில் ஏற்றப்பட்டு துரத்தப்பட்டான். 

அவ்வாறு கப்பலில் வந்து கொண்டிருந்தபோது கடும் புயல்காற்றின் காரணமாக அவர்களுடைய கப்பல் இலங்கையில் கரைதட்டியது.

விஜயன் இலங்கையில் காலடி எடுத்து வைத்தபோது தங்க நிறத்திலான மணலை கண்டான். 

எனவே "தங்க மணல்" என்ற கருத்தை உடைய "தம்பபன்னி" என்ற பெயரை அந்த இடத்திற்கு வைத்தான்.

அந்நேரத்தில் கடற்கரை ஓரமாக நாயொன்று உலாவிக் கொண்டிருப்பதை கண்ட விஜயன் இத்தீவிலே உயிரினங்கள் வாழக்கூடும் என யோசித்து நாயை இரகசியமாக பின்தொடர்ந்து சென்றான்.

ஆனால் அவனால் நாயை கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஆனால் அதற்கு மாறாக ஒரு மரத்திற்கு கீழ் அழகான பெண்ணொருவர் நூல் நூற்று கொண்டிருப்பதை கண்டான்.

அவனின் துரதிருஷ்டம் அவள் உடனே மறைந்து விட்டாள். 

இதனால் அவளை கண்டுபிடித்து கொண்டுவரும்படி தன்னுடைய நண்பர்களை அனுப்பி விட்டான். 

ஆனால் அவர்கள் ஒருவரும் திரும்பி வரவில்லை.

இதனால் தானே செல்வது என முடிவெடுத்த விஜயன் அவர்களை தேடி சென்றபோது அரக்கர் குல தலைவியான அப்பெண் "குவேனி" தன்னுடைய நண்பர்களை சிறைபிடித்து இருப்பதை கண்டுகொண்டான்.

உடனே விஜயன் "குவேனியை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தி அவனுடைய நண்பர்களை விடுதலை செய்யும்படி" கூறியதாகச் சொல்லப்படுகிறது.

அவனுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட குவேனி அவனுடைய நண்பர்களை விடுதலை செய்ததோடு தன்னுடைய அரக்கர் கோத்திரத்தினரை வென்று இலங்கையின் மன்னனாக விஜயன் வருவதற்கும் உதவி செய்தாள்.

இதனால் விஜயனின் மனைவியாக வாழ்ந்த குவேனி அவனின் மூலம் இரண்டு குழந்தைகளுக்கும் தாயானாள். 

ஆனால் அவளால் அவனின் மனைவியாக சிறிது காலமே வாழ முடிந்தது. 

விஜயன் தன்னுடைய அரசுரிமையை சட்டபூர்வமானதாக மாற்றுவதற்காக இந்தியாவின் Kshatnya உயர் சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தான்.

இதனால் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் தன்னிடம் விட்டுவிட்டு செல்லும்படி குவேனியை விஜயன் வேண்டினான். 

ஆனால் குவேனி தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள். 

விஜயானால் உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் என பயந்த குவேனி தன் இரண்டு பிள்ளைகளையும் காட்டில் மறைந்திருக்க சொல்லிவிட்டு தனது சமூகத்தினரிடம் உதவி கேட்டு சென்றாள். 

ஆனால் விஜயனுக்கு தம்மை காட்டிக் கொடுத்ததால் அவள் மீது கடும் கோபத்தில் இருந்த அவளுடைய சமூகத்தினர் அவளை கொலை செய்தனர்.

2.இராமன்-சீதை


இக் கதையானது இந்தியாவை அடிப்படையாக கொண்டிருந்தாலும் அதன் ஒரு பகுதி இலங்கையிலும் இடம்பெறுகின்றது. 

உலக வரலாற்றில் மிகவும் பிரபல்யமானதொரு காதல் கதை இதுவாகும். 

இருவரும் அரச பரம்பரையை சேர்ந்தவர்கள். சீதை மிதிலையின் மன்னனான ஜனகவின் மகளாகும் இராமன் இந்தியாவில் உள்ள அயோத்தியின் இளவரசனாக இருந்தான்.

இருவருக்கும் இடையில் திருமணம் நடைபெற்று அவர்கள் இருவரதும் திருமண வாழ்க்கை இன்பகரமானதாக கழிந்துகொண்டிருந்தது.

ஆனால் ஆட்சிபீடமேற இருந்தவனான இராமனின் வளர்ப்புத் தாயான கைகேயி தனது கணவனான தசரதனை சம்மதிக்க வைத்து இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்லும்படி வேண்டச்செய்ததோடு தனது சொந்த மகனான பரதனை ஆட்சிபீடமேற்ற சூழ்ச்சி செய்தாள்.

இதன் காரணமாக இராமனின் அன்பு மனைவியான சீதையும் தனக்கு கிடைத்திருக்கும் அனைத்து அரச சுகபோகங்களையும் விட்டுவிட்டு தனது ஆருயிர் கணவனோடு தானும் வனவாசம் செல்ல தீர்மானித்தாள்.

அன்றைய காலத்தில் இலங்கையை அரக்கர் கோத்திரத்தை சேர்ந்த "இராவணன்" என்ற பலமிக்க மன்னன் ஆண்டு வந்தான்.

அவனுடைய தங்கையான சூர்ப்பனகை தான் விரும்பிய உருவம் எடுக்கக்கூடிய சக்தி படைத்தவளாக இருந்தாள்.

இராமனின் அழகையும், வீரத்தையும், புகழையும் அறிந்திருந்த சூர்ப்பனகை அவன் மீது காதல் கொண்டாள். 

இதையறிந்த இராவணன் தனது தங்கையின் காதலுக்கு உதவுவதற்காக சீதையை கடத்திக்கொண்டு வந்து இன்றைய காலத்தில் சீதா-எளிய என்ற ஊரில் சீதை அம்மன் கோவில் அமைந்துள்ள இடத்தில் அவளை சிறைவைத்தான்.

சீதையின் அழகில் மயங்கிய இராவணன் அவளை தனது மனைவியாக்க ஆசை கொண்டான். 

ஆனால் சீதை தனது கணவனான இராமனுக்கு என்றும் உண்மையாக இருக்க விரும்பினாள்.

இதனால் அனுமானின் உதவியோடு சீதையை இராமன் காப்பாற்றியதோடு இருவரும் மீண்டும் இணைந்தனர். 

அதேநேரம் இராமன் தனக்கு வாரிசுரிமையான ஆட்சியையும் மீண்டும் கைப்பற்றியதாக சொல்லப்படுகின்றது.

3.தீககாமினி-உன்மதா சித்ரா


பண்டுவாசுதேவ-மன்னன் பத்தகச்சானாவின் மகளாக உன்மதா சித்ரா பிறந்த போது அவளது எதிர்காலத்தை கணித்த ஜோதிடர்கள் இவளுக்கு பிறக்கும் மகன் தனது சகோதரர்களையும் மாமாமார்களையும் (உன்மதாவின் சகோதரர்கள்) கொலை செய்துவிட்டு ஆட்சியை கைப்பற்றுவான் என ஆரூடம் கூறினர்.

அந்த முன் எதிர்வுகூறலை கேட்டு அதிர்ச்சியடைந்த அவளுடைய சகோதரர்கள் அவளை கொலை செய்வதற்கு தீர்மானித்தனர். 

ஆனால் அனுபவமும்,முதிர்ச்சியுமுடைய அவருடைய மூத்த சகோதரரான "அபய" அவளை கொலை செய்யாமல் அவள் மீது எந்த ஆண்மகனதும் கண்பார்வையும் பட்டுவிடாதபடி உயர்ந்ததொரு கோபுரத்தில் அவளை சிறைவைக்கும் படி ஆலோசனை வழங்கினார்.

அதேநேரம் பத்தகச்சானாவின் சகோதரன் மகனான தீககாமினி, உன்மதா கோபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மாளிகையில் தனது அத்தையின் ஆதரவோடு வேலைக்கு சேர்ந்தான். 

சிறைவைக்கப்பட்டிருக்கும் உன்மதாவைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அவனது மிக முக்கிய எண்ணமாக இருந்தது.

உன்மதாவை தடுத்து வைத்திருக்கும் கோபுரத்தை காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சித்ரராஜ மற்றும் காலவேல ஆகியோரோடு தீககாமினி நெருங்கிய நண்பனாகியதால் உன்மதாவை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை அவர்கள் இருவரும் தீககாமினிக்கு ஏற்படுத்திக்கொடுத்தனர்.

முதல் பார்வையிலேயே அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டுவிட அந்த காதல் காவியமானது மகாவம்சத்தின் ஒன்பதாவது பகுதியின் பெரும்பாலான பகுதியை இவர்களது கதைக்காக வேண்டி ஒதுக்கவேண்டிய அளவுக்கு சரித்திரபூர்வமானதாக மாறியது.

இருவருக்கும் இடையிலான காதல் இரகசியமாக தொடர்ந்து கொண்டிருக்க அதன் விளைவாக இறுதியில் உன்மதா கர்ப்பமானாள். 

இதனையறிந்து கொண்ட அவளின் சகோதரர்கள் சித்ரராஜவையும் காலவேலனையும் தங்களது கடமையை சரிவர செய்யாததற்கு தண்டனையாக கொலை செய்தனர்.

அதேநேரம் உன்மதாவையும் கொலை செய்வதற்கு அவளுடைய சகோதரர்கள் திட்டமிட்டனர். 

இப்பொழுதும் அவளது உதவிக்கு வந்த அவர்களது மூத்தசகோதரர் "அவள் ஒருவேளை ஆண் குழந்தைக்கு பதில் பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டால் அக்குழந்தையை அவளை விட்டும் வேறாக்கி வைப்போம் அல்லது ஆண் குழந்தையையே பெற்றால் அதை கொலை செய்துவிடுவோம்" என்றும் முன்மொழிந்தார்.

ஜோதிடர்களின் கணிப்பின்படி ஆண் மகனையையே உன்மதா பெற்றெடுத்தாள். 

ஆனால் தன் சகோதரர்களின் கொலை செய்யும் எண்ணத்தை அறிந்திருந்த அவள் முன்னரே அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு தனது மகனை "தொரமடலவ" என்ற கிராமத்திற்கு இரகசியமாக அனுப்பி வைத்ததோடு விவசாயக் குடும்பம் ஒன்றிலிருந்து பெண் குழந்தையொன்றை பெற்று தனக்கு பிறந்த மகள் என பொய் கூறி தன் சகோதரர்களை ஏமாற்றி வளர்த்து வந்தாள்.

அதேநேரம் கிராமத்தில் வளர்ந்து வந்த அவளுடைய மகன் தன் உண்மையான பெற்றோரை பற்றி அறிந்ததோடு ஜோதிடர்கள் ஏற்கனவே கணித்திருந்தபடி தன்னையும் தன்னுடைய தாயையும் கொல்வதற்கு துடித்துக்கொண்டிருந்த தனது ஒன்பது மாமாமார்களையும் கொலை செய்ததோடு மூத்த மாமாவை மாத்திரம் கொலை செய்யாது விட்டுவிட்டான்.

ஆட்சியை கைப்பற்றி சிறந்த முறையில் ஆட்சிசெய்து இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவனாக இடம்பிடித்த அவ்மன்னனே பண்டுகாபய மன்னனாகும்.

4.விகாரமகாதேவி-காவந்திஸ்ஸ மன்னன்

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தெற்கு ருகுணு இராச்சியம் காவந்திஸ்ஸ மன்னனால் ஆளப்பட்டது. 

அவன் உயரம் குறைந்தவனாகவும் கடும் கருப்பு நிறம் கொண்டவனாகவும் இருந்ததாக மகாவம்சம் கூறுகின்றது. 

நவீன வரலாற்றாசிரியர்கள் அவன் தெற்கு இராச்சியம் முழுவதையும் இணைக்குமளவு இராஜதந்திரம் மிக்கவனாக இருந்ததாக கூறுகின்றனர்.

அதேநேரம் களனி இராச்சியத்தை களனிதிஸ்ஸ என்ற மற்றொரு சிற்றரசன் ஆண்டு வந்தான். 

அவனிடம் கொடூரமான பண்புகள் நிறைந்திருந்தன. 

எந்தளவுக்கெனில் பௌத்த மதகுரு ஒருவரை எண்ணெயில் உயிரோடு எரித்ததன் காரணமாக கடவுள் கோபமுற்று கடலை பெருக்கெடுக்க செய்து ஊருக்குள் நுழைவித்ததாக சொல்லப்படுகின்றது.

இதனை தடுத்து நிறுத்த செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி மன்னன் ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டபோது இளவரசியை கடலுக்கு உயிர்பலியாக வழங்கினால் வெள்ளப்பெருக்கு நிற்கும் என கூறினர். 

இதன் காரணமாக மன்னனின் மகளான விகாரமகாதேவி சிறியதொரு ஓடத்தில் வைக்கப்பட்டு கடலில் மிதக்கவிடப்பட்டாள்.

அவள் சென்ற ஓடம் கடல் அலைகளுக்கு அடித்து செல்லப்பட்டு இறுதியில் ருஹுணு இராச்சியத்தின் கிரிந்த என்ற இடத்தில் கரைதட்டியது. 

உடனே அவள் ருஹுணு மன்னனான காவந்திஸ்ஸவின் முன்னால் கொண்டுவரப்பட்டாள்.

விகாரமகாதேவியின் கதையினால் கவரப்பட்ட மன்னன் அவளை திருமணம் செய்துகொண்டு தன் மனைவியாக்கிகொள்ள தீர்மானித்தான்.

இத்தம்பதிக்கு பிறந்தவனே பிற்காலத்தில் இலங்கை வரலாற்றில் மிகச்சிறந்த மன்னனாக கருதப்படும் துட்டகைமுனு மன்னனாகும். 

அதேபோல் விகாரமகாதேவி நாட்டினுடைய தேசிய கதாநாயகியாக கருதப்படுகின்றாள்.

5.சாலிய-அசோகமாலா

இவர்களுடைய காதல் கதையானது இலங்கை வரலாற்றில் அழகான காதல் காவியங்களில் ஒன்றாகும். 

இக்காதல் கதையானது அனுராதபுர காலத்தில் இடம்பெற்றதாகும்.

இளவரசனான சாலிய இலங்கை வரலாற்றில் மிக முக்கிய இடம்பிடிக்கும் துட்டகைமுனு மன்னனின் ஒரே ஒரு செல்வப்புதல்வனாகும். 

அவன் ஒருநாள் அரசகுல நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதற்காக சென்று கொண்டிருந்தபோது எமது கதையின் கதாநாயகியான அசோகமாலாவை பார்க்கின்றான். 

பார்த்தவுடனேயே அவள்மீது காதல் கொள்கின்றான்.

அவளுடைய உண்மையான பெயர் தேவி என்பதாகும். 

ஆனால் இளவரசன் அவள் அசோக மரத்தில் பூ பறித்துக்கொண்டிருக்கும்  போதே அவளைப் பார்த்தான். 

இதனாலேயே அவன் அவளுக்கு அசோகமாலா என்று பெயர் சூட்டினான்.

இளவரசன் அசோகமாலாவை பார்த்த முதல் சந்திப்பிலேயே அவளை தனது மாளிகைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. 

இருவரும் ஒருவரையொருவர் ஆழ்ந்து நேசித்தனர்.

ஆனால் அசோகமாலா தாழ்ந்த சமூகத்தை சேர்ந்தவளாக கருதப்பட்டதால் முடிக்குரிய இளவரசனான சாலிய அவளை திருமணம் செய்யமுடியாது என கருதப்பட்டது. 

அத்தோடு அது அன்றைய காலத்தில் மரணதண்டனைக்குரியதொரு குற்றமுமாகும்.

அதை பொருட்படுத்தாத சாலிய இளவரசன் தான் அசோகமாலாவை திருமணம் செய்வதற்கு இளவரசன் என்ற பதவி தடையாக இருக்குமாயின் அப்படியானதொரு பதவி தனக்கு தேவையில்லை என முடிவெடுத்து தனது முடிக்குரிய இளவரசன் என்ற உரிமையை கைவிட்டான்.

ஆரம்பம் முதலே இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பை வெளியிட்டு கொண்டிருந்த இளவரசனின் தந்தையான துட்டகைமுனு மன்னன் கூட இவர்களின் காதலின் ஆழத்தை பார்த்தவுடன் அவர்களை வாழ்த்தினான்.

இவர்களுடைய காதல் காவியமானது வரலாற்று புத்தகங்களில் பதியப்பட்டுள்ளதோடு இவர்களை பற்றி "அசோகமாலா" என்ற பெயரில் பாடகர் "Chandraleka Perera" என்பவரால் பாடலும் பாடப்பட்டுள்ளது.

மேலும் இவர்களை நினைவூட்டும் விதமாக கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இசுருமுனிய விகாரையில் "இசுருமுனிய காதலர்கள்" என்ற பெயரில் வரலாற்று புகழ்மிக்க சிலை ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது.

6.டஸ்கன்-பிரமிளா

இக்காதல் கதையானது கண்டி இராசதானியின் காலத்தில் இடம் பெற்றதாகும்.

பிரமிளா, இலங்கை வரலாற்றின் இறுதி சிங்கள மன்னனான ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்க மன்னனின் மனைவிகளில் ஒருத்தியாகும். 

அவளுக்கு மன்னனுடனான திருமணவாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையவில்லை.

தனது 17வது வயதிலே முடிசூடிக் கொண்ட மன்னன் ஆடம்பர சுகபோகங்களில் அதிகம் ஆர்வமுடையவனாக இருந்ததோடு நாளாந்தம் பல மதுபான களியாட்டங்களில் கலந்து கொள்பவனாகவும் இருந்தான். 

அத்தோடு தான் ஒரு சிறந்த கணவனாக இருப்பதற்கான எந்த ஒரு தன்மையும் அவனிடம் காணப்படவில்லை.

அதேநேரம் மன்னரின் அரசவையில் பிரெஞ்சு வம்சாவளியை சேர்ந்தவரான "Daskon" என்ற அதிகாரியும் கடமை புரிந்தார். 

அவர் வசீகர தோற்றமுடையவராக இருந்ததோடு திறமையான முறையில் கவிதை இயற்றி பாடக்கூடியவராகவும் இருந்தார். 

மேலும் பல பெண்களுடனான தொடர்புகளுக்காகவும் புகழ்பெற்றிருந்தார்.

அவருடைய அழகையும் திறமையையும் கண்டு பல மகாராணிகள் அவர் மீது காதல்கொண்ட போதிலும் அவருடைய உள்ளமானது பிரமிளாவின் மீதே சென்றது. 

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையிலான தொடர்பு பலமான கட்டத்தை அடைந்ததோடு இவர்கள் தொடர்புபற்றி அரண்மனையில் இருந்த ஊழியர்கள் பலரும் அறிந்திருந்தனர்.

ஒருநாள் பிரமிளாவை பெருமைப்படுத்தும் விதமாக அவருடைய உருவசிலை ஒன்று வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டது. 

அதிலே அவளுடைய அந்தரங்க பகுதியில் அவளின் பிறப்பின் அடையாளம் சரியான இடத்தில் சரியான தகவல்களோடு அமைக்கப்பட்டிருப்பதை மன்னன் அவதானித்தான்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மன்னன் சிற்பிகளை அழைத்து அவளது பிறப்பின் அடையாளத்தை எப்படி நீங்கள் அறிந்து கொண்டீர்கள் என வினவியபோது டஸ்கனே அது பற்றி தமக்கு கூறியதாக தெரிவித்தனர்.

டஸ்கன் தன்னுடைய நெருங்கிய நண்பனாக இருந்து கொண்டு தன்னுடைய மனைவியோடு தவறான தொடர்புகளை பேணி தனக்கு துரோகமிழைத்து இருப்பதை அறிந்து கடும் கோபமுற்ற மன்னன் டஸ்கனை கைது செய்து சிரச்சேதம் செய்யும்படி கட்டளையிட்டான். 

இதன்படி சிரச்சேதம் செய்யப்பட்டு மரணித்தான்.

7.Thomas Maitland and Lovina

இவர்கள் பற்றிய சுவாரஸ்யமானதொரு காதல் கதையை வாசிக்க கீழுள்ள லிங்கை அழுத்தவும்.

https://tamilviluthukal.blogspot.com/2021/06/mount-lavinia-hotel.html

ஆக்கம்:-அல்தாப் ஹசன் 





1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post