கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்


2019 நவம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் ஆரம்பமாகிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் வியாபித்து சின்னாபின்னப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 42 இலட்சத்திற்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர்.

இந்த கொரோனா வைரஸினால் பல உலக நாடுகளின் பொருளாதாரம் பாரியளவில் விழுந்திருப்பதோடு நாளாந்தம் உழைக்கின்ற நிலைமையில் இருந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வருமானமின்மையால் இருட்டில் சென்று சுவரில் மோதியவன் போல அடுத்த வேளை உணவிற்கு கூட என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவியதற்கு பின்னர் ஏற்பட்ட நிலைமையினை குடும்பத்திலும் சமூகத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள், குடும்ப வன்முறை, கல்வி நடவடிக்கைகள், போதைப்பொருள் என்ற தலைப்பில் நோக்குவது சிறந்தது என நினைக்கின்றேன்.

அந்தவகையில் கொரோனா பரவல் காரணமாக குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் என நோக்குவோமாயின் சமூகத்திலுள்ள அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியில் வர வேண்டியதொரு சூழல் ஏற்பட்டுள்ளதோடு ஒருவருக்கொருவர் குறைந்தது ஒரு மீட்டராவது இடைவெளி பேணவேண்டியதோடு கூட்டம் கூடக்கூடிய இடங்களான பாடசாலைகள்,கடைகள், மதஸ்தலங்கள், தியேட்டர்கள், நீச்சல் தடாகங்கள் போன்றன கூட்டம் கூடுவதற்கு தடை செய்யப்பட்டோ அல்லது குறைந்தளவான எண்ணிக்கையுடையோர் மாத்திரமே உள்வாங்கப்பட வேண்டியதொரும் சூழல் அமைந்துள்ளதோடு அவ்வாறு உள்நுழையும் போதும் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றும்படி வேண்டப்படுகின்றதோடு அடிக்கடி கைகளை கழுவிக் கொள்ளும்படியும் வேண்டப்படுகின்றனர்.

மேலும் திடீரென அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் பயணத் தடை காரணமாக ஒருவரோடொருவர் நேரடியாக தொடர்புகளை மேற்கொள்வது தடுக்கப்பட்டதோடு மாறாக சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்து ஒருவரோடொருவர் தொடர்புகொள்ளவும் காரணமாக அமைந்தது.

மேலும் ஊரடங்கின் காரணமாக குடும்பத்தோடு நேரம் செலவிடுவதற்கு முடிந்ததோடு ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பும் அதிகரித்தது.

இதனால் இவ்வளவு காலமும் பரபரப்பும் பிஸியுமானதொரு வாழ்க்கைக்கு தம்மை பழக்கப்படுத்தியிருந்த மனிதர்கள் அதிலிருந்து விடுபட்டு முறைமையானதொரு வாழ்க்கை முறைக்கு தம்மை பழக்கப்படுத்திக்கொண்டனர்.

ஊரடங்கு காரணமாக போதுமான நேரம் மனிதர்களுக்கு கிடைத்ததனால் புதிய பொழுது போக்குகள் உருவாகவும், தாம் இதுவரை காலமும் செய்ய நினைத்திருந்து செய்ய முடியாமல் போன விடயங்களை செய்து பார்க்கவும், தமது திறமைகளை வளர்த்தெடுக்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

மேலும் குடும்பத்தோடு வெளியில் சென்று ஆடம்பர விடுதிகளில் உண்ணும் துரித உணவுகளுக்கு பதிலாக வீட்டிலேயே உற்பத்தி செய்த தரமானதும், ஆரோக்கியமானதுமான உணவுகளை உண்பதற்கு தம்மை பழக்கப்படுத்திக் கொண்டதோடு அதில் ஆர்வமும் செலுத்தத்தொடங்கினர்.

மேலும் மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படைத்தேவைகளும் அதற்கான செலவீனங்களும் குறைவானதே என்பது புரிந்துகொள்ளப்பட்டது.

மேலும் உழைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அரிதாகி வருமானமில்லாததொரு சூழ்நிலை ஏற்பட்டதனால் பெரும்பாலானவர்கள் சுயதொழில் முயற்சிகள், வீட்டுத்தோட்டம், சுயஉற்பத்தி போன்றவற்றில் ஈடுபட ஆரம்பித்தனர்.

தொழிற்சாலைகள் இயங்குவது குறைந்ததனால் கழிவுகள், புகை என்பன காற்றோடும் சூழலோடும் கலப்பது குறைந்தது. இதன் காரணமாக சூழலின் காற்றோட்டம் சுத்தமானதோடு மனிதனின் கைகளால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளில் இருந்து இயற்கை தன்னை மீளுருவாக்கம் செய்வதற்கானதொரு வாய்ப்பு கிட்டியது.

தன் குடும்பத்தில் உள்ள யாரும் நோய் தொற்றுக்கு உள்ளாகாமல் பாதுகாக்க வேண்டிய தேவை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உள்ளது. குறிப்பாக தொழிலுக்காக வெளியே சென்று வரும் ஆண்கள் தன் குடும்பத்தில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் ஆகியோருக்கு நோயை எடுத்துச் செல்லும் நோய் காவிகளாக விளங்கும் அபாயம் உள்ளதால் அவர்கள் மீது பாரியதொரு பொறுப்பு உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் படி(2020) கொரோனா பரவல் காரணமாக உலக பொருளாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இது 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியோடு ஒப்பிடும் போது 3 வீதம் அதிகமானதொரு நிலையாகும்.

இதன்தாக்கம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறவேண்டும். இலங்கையில் உள்நாட்டு உற்பத்தி இல்லாததால் ஏற்றுமதி தடைப்பட்டு, சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு சமூக இடைவெளிகாரணமாக வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதிருப்பதும், பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்திருப்பதாலும், கடன்களை வெளிநாட்டு நாணயங்களில் செலுத்த வேண்டியிருப்பதாலும் இலங்கையின் பொருளாதாரம் மந்த நிலையில் காணப்படுவதன் காரணமாக பல வியாபார நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டோ அல்லது பகுதியளவில் தமது பணியாளர்களை குறைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதனால் சமூகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.

இக்கட்டான நேரங்களில் தேவைப்படும் கையிருப்பு நிதி குறைந்துள்ளதால் பல குடும்பங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு உட்பட்டுள்ளனர். இதனால் உழைப்பதற்கான வாய்ப்புகளும், பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளும் குறைந்தளவில் காணப்படுவதனால் கையிருப்பில் சேமிப்பில்லாத குடும்பங்கள் பொருட்களை கொள்வனவு செய்யவும் குழந்தைகளுக்கான மருத்துவ பராமரிப்புக்கான செலவீனங்களை பெற்றுக்கொள்வதிலும் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

மேலும் அரசாங்கம் மஞ்சள், ஏலம், போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதாலும் அவை போதுமான அளவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாததாலும் அவற்றின் விலை பன்மடங்கு அதிகரித்து காணப்படுவது மக்களுக்கு மேலும் சுமையாக மாறியுள்ளது.

உலக வங்கியின் அறிக்கையின்படி இலங்கையில் 4.1 வீதமானோர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாகவும் மூன்றில் ஒரு பகுதியினர் நாளாந்தம் 10 அமெரிக்க டொலருக்கு குறைவாகவும் எட்டு வீதமானோர் 3.20 அமெரிக்க டொலருக்கு குறைவாகவும் 36 வீதமானோர் 5 அமெரிக்க டொலருக்கு குறைவாகவும் நாளாந்தம் சம்பாதிப்பதாக கூறப்படுகின்றது.

மேலும் உலக வங்கியின் அறிக்கையின்படி அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உள்ளோர் தமது சம்பளத்தில் 15 வீதத்தை தமது உணவுத் தேவைக்காக செலவழிக்கின்றபோது இலங்கையில் வாழும் மக்கள் தமது சம்பளத்தில் அல்லது நாளாந்த உழைப்பில் 40 வீதத்தை உணவுத் தேவைக்காக செலவளிப்பதாக கூறப்படுகின்றது.

இலங்கையில் வாழ்வோர் இறைச்சி,மீன்,முட்டை போன்ற போசாக்கான உணவுகளை வாங்க முடியாமல் பழங்கள் மரக்கறிகளை மட்டும் உண்பதோடு 39வீதமான குழந்தைகள் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு சமூகத்தில் வருமானத்திற்கான வாய்ப்புக்கள் குறையும்போது திருட்டு, கொள்ளை, விபச்சாரம், போதைப்பொருள் விற்பனை போன்ற சட்டரீதியற்ற செயற்பாடுகள் அதிகரிக்கும்.

அடுத்ததாக கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட குடும்ப வன்முறைகள் குறித்து ஆராய்வோமாயின் சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக வீடுகளிலேயே இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டதால் பிள்ளைகள், இளம்பராயத்தினர், பெண்களுக்கெதிரான வன்முறை உலகளவில் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்ப வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள், நெருங்கிய உறவினர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோக செயல்பாடுகள் பாரியளவில் அதிகரித்துள்ளது.

ஆதாரப்பூர்வமான தகவல்களின்படி சில நாடுகளில் 10 முதல் 50 வீதமளவில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. சீனாவின் "ஹூபேய்" மாகாணத்தில் நெருங்கிய உறவினர்களால் இழைக்கப்படும் வன்முறைகள் மூன்று மடங்கு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் 92,000 சிறுவர் துஷ்பிரயோக குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி அதில் கலந்து கொண்டோரில் 70 வீதத்துக்கும் அதிகமானோர் வாய்மொழிரீதியான வன்முறைகளுக்கு தாம் உள்ளானதாக தெரிவித்திருந்த அதே வேளை 7.8 வீதமானோர் உடல்ரீதியாகவும் 5.6 வீதமானோர் பாலியல் ரீதியாக தாம் துஸ்பிரயோகத்திற்குள்ளானதாகவும் தெரிவித்திருந்தனர்.

துஷ்பிரயோக நடவடிக்கைகளை மேற்கொண்டோரில் 49 வீதமானோர் அயல் வீட்டாராக இருந்த அதேவேளை 25 வீதமானோர் பெற்றோராலும் 24 வீதமானோர் தமது நெருங்கிய உறவினர்களாலும் வன்முறைகளுக்கு உட்பட்டிருந்தனர். என்றாலும் மேலே கூறப்பட்ட எண்ணிக்கையானது பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாததன் காரணமாக குறைந்த அளவிலான எண்ணிக்கையாகவே இருக்கும் என சொல்லப்படுகின்றது.

சிறுவர்கள், இளம் பராயத்தினர், பெண்கள் அதிகளவில் வன்முறைகளுக்கு உட்படுவதற்கான  காரணிகளை ஆராய்ந்தோமாயின் துஷ்பிரயோகத்தில் ஈடுபட கூடியவர்களோடு அதிகளவு நேரம் செலவழித்தமை, வேலைவாய்ப்பின்மை யின் காரணமாக வருமானமின்மையால் அதிக மன அழுத்தத்திற்குள்ளானோர், லொக்டவுன் காரணமாக வெளியில் செல்ல முடியாத சூழலினால் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுவோர் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சம்பந்தமாக குடும்பத்தினர்,உறவினர், நண்பர்கள்,அயலவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், வேலைசெய்யும் இடத்திலுள்ள சக பணியாளர்கள், பாதுகாப்பு படையினர், சமூக சேவையாளர்களிடம் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாதிருப்பதும் அவர்களுக்கு அது பற்றிய போதிய தெளிவின்மையுமாகும் என்று கூறமுடியும்.

அதேநேரம் உடல்ரீதியாக அல்லது மனரீதியாக பாதிப்புக்குள்ளாகி மற்றவர்களுடைய உதவியை கேட்கமுடியாத நிலையிலிருக்கின்ற குழந்தைகளும் பெண்களுமே அதிகளவில் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர்.

மேலும் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள்,பெண்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், அரவாணிகள், பாலினமாற்றம் செய்தவர்கள், அகதிகளாக வாழ்வோர் என்போரும் அதிகமாக வன்முறைகளுக்குள்ளாகின்றனர்.

சிறார்கள் அதிகளவில் வன்முறைகளுக்கு உட்படுவதன் காரணிகளை நோக்குவோமாயின் தமக்கு நடக்கும் கொடுமைகளை புரிந்துகொள்ள முடியாத சிறிய குழந்தைகளை குறிப்பிட முடியும். ஏனெனில் அவர்களுக்கு வெளியில் சென்று உதவி கேட்பதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே உள்ளதனாளாகும். பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக பாடசாலை மூலமும் உதவிகளை பெற முடியாததொரு சூழ்நிலை அவர்களுக்கு இருக்கின்றது. மேலும் தற்காலத்தில் அதிகமான நேரத்தை இணையத்தில் செலவழிப்பதன் காரணமாக இணையவழி துஷ்பிரயோகங்களுக்குட்படவும் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.

பெண்கள் அதிகளவில் வன்முறைகளுக்கு உட்படுவதன் காரணிகளை நோக்குவோமாயின் வீட்டிலேயே அடைபட்டிருந்து சிறுவர்கள்,நோயாளிகள், மற்றும் வயது முதிர்ந்தோரை கவனிப்பதால் ஏற்படும் அழுத்தத்தினால் தனது இணையோடு ஏற்படும் முரண்பாடுகளை முதன்மையாகக் கூறமுடியும். வீட்டிலேயே தொடர்ந்தும் இருப்பதால் தனது இணையின் பாலியல் தேவையை அடிக்கடி நிறைவேற்ற வேண்டிய தேவை ஏற்படுவதனால் பாதுகாப்பற்றதும் சமநிலையற்றதுமான பாலியல் வன்முறைக்கும் பெண்கள் உட்படுகின்றனர்.

வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகளால் பெண்கள் தொலைபேசி மற்றும் இணையத்தை பாவிப்பது மட்டுப்படுத்தப்படுவதாலும் கண்காணிக்கப்படுவதாலும், பெண்கள் தம் பொருளாதாரத் தேவைகளுக்கு பெரும்பாலும் தனது இணையையோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களையோ தங்கியிருப்பதன் காரணமாக குற்றவாளிகளுக்கு அது ஒரு சாதகமான விடயமாகவும் அமைந்துள்ளது.

என்றாலும் தற்போது பெரும்பாலான நாடுகளில் குரோனா காலத்தில் ஏற்படும் சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றே கூறவேண்டும். ஏனெனில் தமக்கு நடக்கும் கொடுமைகளை உரிய தரப்பிடம் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் அரிதாகவே கிடைக்கின்றது என்பதனாலாகும்.

கொரோனா பரவலின் பின்னரான கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தோமாயின் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பின் அறிக்கையின்படி உலகில் உள்ள 90 வீதமான மாணவர்கள் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. அதாவது உலகளவில் 1.6 பில்லியன் மாணவர்கள் கல்வியை பெற்றுக்கொள்வதில் பெரும் தடங்களை எதிர்நோக்கி உள்ளனர்.

உலகிலுள்ள 40 வீதமான ஏழை நாடுகள் தம் நாட்டிலுள்ள பிள்ளைகளுக்கான உரிய கல்வியை வழங்குவதில் இக்கொரோனா காலத்தில் பல பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்கின்றன.

கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளதனால் இணையவழி கற்கைகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. இதன்காரணமாக மாணவர்கள் இணையவழி கற்றல் செயற்பாடுகளுக்கு கணினியையோ அல்லது தொலைபேசியையோ இணையதள வசதியுடன் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்கள் தம் குழந்தைகளுக்கான இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் பல பாரிய சவால்களை எதிர்கொள்கின்றன.

அதேநேரம் இணையவழி கற்றலுக்கான தொலைத்தொடர்பு வசதிகளை பெற்றோர் ஏற்படுத்தி கொடுத்த போதிலும் பல பின்தங்கிய கிராமங்களிலுள்ள மாணவர்கள் இணையம் வழி கற்கைக்கான தொலைபேசி இணைப்பைத் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக வீட்டுக் கூரைகளின் மீதோ அல்லது மரங்களின் மீதோ ஏறியிருந்தே தொலைபேசி இணைப்பை பெற்றுக்கொண்டு ஆசிரியர்களால் தமக்கு வழங்கப்படும் பயிற்சிகளை வாட்ஸ்அப் மூலமோ அல்லது Zoom மூலமோ தொடர்கின்றனர்.

மேலும் வீட்டிலிருந்தே இணையவழி கற்கை நெறியை தொடர வேண்டியிருப்பதன் காரணமாக பெற்றோர் தமது குழந்தைகளுக்கான ஆசிரியர்களாக மாறவேண்டியதொரு சூழல் ஏற்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு ஆசிரியர்களால் வழங்கப்படும் Assignmentகளுக்கு பெற்றோரும் உதவ வேண்டியுள்ளதால் அது அவர்களுக்கு கடினமாக அமைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக பல வயதினரையுடைய பிள்ளைகள் ஒரே வீட்டில் வசிக்கும் பெற்றோரே அதிக சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். வீட்டிலுள்ள இரு பிள்ளைகளுக்கு ஒரே நேரத்தில் பாட நேர அட்டவணை வழங்கப்பட்டிருந்து போதுமான வசதிகள் காணப்படாதவிடத்து யாருக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது என்பதில் பெற்றோர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

நாளாந்தம் உழைக்கும் பெற்றோருக்கு வருமானக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக வீட்டிலுள்ள குழந்தைகள் வேலைக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்படும்போது அவர்கள் பாடசாலையை விட்டுவிலக வேண்டியதொரு சூழல் ஏற்படுகின்றது.

பிள்ளைகள் தொடர்ந்தும் இணையவழியில் கற்பதன் காரணமாக அவர்களுக்கு பார்வை குறைபாடு மற்றும் மனஅழுத்தம் போன்ற நோய்களுக்கு உட்படுவதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றது.

அதேநேரம் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக சிறுபராய குழந்தைகளின் பெற்றோர் தம் குழந்தைகளை பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக அதிக நேரங்களை ஒதுக்குவதற்கு பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

பெற்றோர் தம் குழந்தைகளோடு செலவழிக்க அதிக நேரங்கள் கிடைக்கின்ற போதிலும் அவர்கள் தம் வீட்டினுள் அலுவலக பணியாளர், ஆசிரியர், பெற்றோர் என பல்வேறு விதமான பங்களிப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அது அவர்களை உளரீதியாக சிரமங்களுக்கு உட்படுத்துவதோடு தன் குழந்தைகளுக்காக உரிய முறையில் நேரத்தை செலவிட முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நிலைமையால் பெற்றோரும் குழந்தைகளும் வீடுகளுக்குள் மாத்திரம் தம் எல்லைகளை வரையறுத்து வாழ வேண்டியதொரு சூழல் உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கான காரணிகளில் கவனம் செலுத்துவதற்கு பெற்றோருக்கு இயலாததாக அமைந்துள்ளது.

வருமானமின்மையின் காரணமாக வீட்டிலே மின்பாவனை மட்டுப்படுத்தப்படும் போது பிள்ளைகள் தம் இணையவழி கற்கைநெறியை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும்.

அடுத்ததாக கொரோனா பரவல் காலத்தில் குடும்பங்களில் ஏற்பட்ட போதை பொருள் பாவனை சம்பந்தமாக நோக்குவோமாயின் உலகில் சமூகரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் உள்ள போதிலும் போதைப் பொருள் பாவனையானது நவீன உலகமயமாக்கல் உலகில் மிகப்பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது. போதைப்பழக்கத்திற்கு அடிமையானதன் காரணமாக உலகில் மில்லியன் கணக்கான மக்கள் தம் வாழ்வை இழந்து தவிக்கின்றனர். சட்டரீதியானதும் சட்டரீதியற்றதுமான பல வகையான போதைப்பொருட்கள் உலக நாடுகளின் பல முக்கியமான நகரங்களில் பயன்பாட்டில் உள்ளன. ஒருவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதில் உளரீதியான காரணிகளும் அதேநேரம் சூழல்ரீதியான காரணிகளும் அதிகம் தாக்கம் செலுத்துகின்றன.

போதைப்பொருள் பாவனையானது உலகளவிலே வியாபித்து காணப்படுவதோடு பல வயதினரையுடையவர்களின் ஆரோக்கியம், உடல் பலம், உறுதியான நன்னடத்தை, பொருளாதாரம், என்பவற்றை பாரியளவில் சிதைக்கக்கூடியதாக உள்ளது மட்டுமின்றி போதை பொருளுக்கு அடிமையானவரின் குடும்பங்களும் இதனால் கடும் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றன.

கொரோனா காலப்பகுதியில் ஊரடங்கு காரணமாக தொழில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் வருமானத்திற்கான வழிகள் இல்லாமலாகியதால் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பலர் தமது போதைப்பொருள் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவேண்டி திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டது சமூகத்தில் ஏற்கனவே பொருளாதார ரீதியாக நலிவடைந்திருந்த பல குடும்பங்களுக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இருந்தது. மேலும் தமக்கு தேவையான போதைப்பொருளை பெற்றுக்கொள்ள முடியாத மனஉளைச்சலில் இருந்தவர்கள் தம் வீட்டில் உள்ள சிறுவர்கள் பெண்களுக்கு எதிராக வன்முறையை மேற்கொண்டதனால் குடும்பங்களில் வன்முறைகள் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைந்தது. அதேநேரம் ஊரடங்கின் காரணமாக போதைப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையாததால் போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபட்டவர்களும் இல்லாமலில்லை.

ஊரடங்கின் காரணமாக சட்டரீதியான மதுவைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அரிதாக இருந்ததன் காரணமாக சட்டரீதியற்ற முறையில் போதைப்பொருள் நடவடிக்கைகள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதே நேரம் நீண்ட ஊரடங்கின் பின்னர் இலங்கை அரசாங்கத்தால் ஊரடங்கு நீக்கப்பட்டு மதுபானசாலைகள் திறக்கப்பட்டபோது கொரோனா நிலைமையையும் கருத்தில் கொள்ளாமல் மதுப்பிரியர்கள் மதுபானங்களை பெற்றுக்கொள்வதற்காக மதுபான சாலைகளுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து முண்டியடித்து மதுபானங்களை வாங்கியமையையும் காணக்கூடியதாக இருந்தது.

மேலும் ஊரடங்கு மற்றும் பயணத்தடை காலத்தில் ஒன்லைன் மூலமாக மதுபானங்களை விற்பதற்கு அரசாங்கம் முயற்சித்தமை நாட்டிலுள்ள புத்திஜீவிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதொரு விடயமாக அமைந்திருந்தது. என்றாலும் அரசாங்கம் பின்னர் திட்டத்தில் இருந்து பின்வாங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆக்கம்:- M.R.அல்தாப் ஹசன்





Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post