கொலம்பியா நாடென்பது போதைப் பொருள் கடத்தலுக்கும் மாபியா குழுக்களுக்கும் பெயர் போனதொரு நாடாகும்.
இவ்வாறான ஆபத்து நிறைந்த ஒரு தொழிலில் ஆண்களாலேயே நிலைத்து நிற்பது கடினம் எனும் போது தனி ஒரு பெண்ணாக எதிரிகள் தன்னுடைய பெயரைக் கேட்டாலே அஞ்சி தொடை நடுங்கும் வகையில் வன்முறைகள் மூலம் தனக்கென யாரும் அசைக்க முடியாத தனி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி ஒரு தசாப்தத்திற்கும் மேலே அமெரிக்கா மற்றும் கொலம்பியாவில் போதை கடத்தல் தொழிலில் கொடி கட்டிப்பறந்த Griselda Blanco என்ற பெண்ணை பற்றியே நாம் இங்கு பார்க்க இருக்கின்றோம்.
கறுப்பு விதவை, La Madrina, Cocaine Godmother, போதைப்பொருள் கடத்தலின் ராணி போன்ற பல சிறப்புப் பெயர்கள் பெற்ற Griselda Blanco 1943 பிப்ரவரி 14ஆம் திகதி பிறந்தாள்.
இவள் 1980 முதல் 2000 ஆண்டின் முற்பகுதி காலப்பகுதி வரை Medellin என்ற குழுவோடு இணைந்து செயற்பட்டு கொலம்பிய போதைப்பொருள் வர்த்தகத்தின் கடவுளாகக் கருதப்பட்டது மட்டுமின்றி மியாமியை அடிப்படையாக கொண்ட கொக்கெய்ன் போதைப்பொருள் வர்த்தகத்தினதும் பாதாள உலக வர்த்தகத்தினதும் முன்னோடியாகவும் கருதப்படுகின்றாள்.
கொலம்பியா நாட்டில் இருந்து நியூயோர்க் மியாமி தெற்கு கலிபோர்னியா பகுதிகளுக்கு கொக்கைன் போதை பொருளை கடத்தி நடவடிக்கைகளில் தோன்றிய முரண்பாடுகளால் ஏற்பட்ட 200க்கும் மேற்பட்ட கொலைகளுக்காகவும் இவள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
Blanco தனது போதைப்பொருள் கடத்தல் தொழிலில் புகழின் உச்சத்தில் இருந்த காலப்பகுதியில் உலகில் அதிக செல்வமும் ஆபத்தும் நிறைந்த பெண்களில் ஒருவராக கருதப்பட்டதோடு போதை பொருள் கடத்தலில் உலகில் அதிகாரம் மிக்க மிக முக்கிய புள்ளியாகவும் திகழ்ந்தாள்.
அவள் தன்னுடைய பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் வர்த்தக இராச்சியத்தை தன் பலமான நிர்வாகத்தால் உயரச் செய்து உலகளவில் பில்லியனராக மாறிய முதல் பெண் குற்றவாளியாகவும் தன்னுடைய பெயரை பதிவுசெய்ததோடு உலகில் எக்காலத்துக்குமுரிய மிகக்கொடிய பெண்ணாகவும் அவள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றாள்.
Blanco கொலம்பியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள Cartagena என்ற ஊரில் பிறந்தாள்.
அவளுக்கு மூன்று வயதான போது அவளும் அவளது தாயும் Medellin என்ற ஊருக்கு இடம்பெயர்ந்தனர்.
அங்கு அவள் இடம் பெயர்ந்து வந்த உடனேயே அங்கிருந்த குற்றச் செயல்கள் நிறைந்த வாழ்க்கை முறைக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொண்டாள்.
Blanco 13 வயததவதற்குள்ளேயே பிக்பாக்கெட் திருடியாகவும் விபச்சாரம் செய்பவளாகவும் மாறியிருந்தாள்.
தன் தாயின் ஆண் நண்பரின் பாலியல் வல்லுறவில் இருந்து தப்பிப்பதற்காக தன்னுடைய 19வது வயதில் வீட்டை விட்டு தப்பி ஓடியவள் 20 வயதுவரை கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டாள்.
Blanco தன் முன்னாள் காதலனான சார்லஸ் கால்பியோடு இணைந்து செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனொருனை கடத்தி கப்பமாக பெருந்தொகை பணத்தை கேட்டதாகவும் அதை வழங்க மறுத்ததால் அச்சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகவும் சொல்லப்படுகின்றது.
Blancoதன்னோடு குறுகிய காலம் குற்றச்செயல்களில் ஈடுபட்ட Carlos Trujilloஐ திருமணம் செய்து அவர் மூலம் இருவருக்கும் மூன்று மகன்கள் பிறந்ததோடு அவர்களுக்கு பாடசாலை கல்வியை பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை.
அத்தோடு அவர்கள் அனைவரும் நீதிமன்ற தீர்ப்புக்கமைய அமெரிக்காவிலிருந்து கொலம்பியாவிற்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டனர். என்றாலும் அவளுடைய கணவரை இவளே ஆள் வைத்து கொலை செய்திருப்பாள் என நம்பப்பட்டது.
1970 களின் நடுப்பகுதியில் Blancoம் அவளது இரண்டாவது கணவரான Alberto Bravoம் நியூயோர்க் நகரில் குடியேறுவதற்கு போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர்ந்ததோடு அங்கே அவர்கள் மிகப் பாரியதொரு கொக்கெய்ன் வியாபாரத்தையும் ஆரம்பித்தனர்.
1975 ஏப்ரல் காலப்பகுதியில் Blancoம் அவளது 30 கூட்டாளிகளும் கூட்டாக இணைந்து போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்டு தண்டப்பணம் செலுத்தும்படி வேண்டப்பட்டனர்.
இதன் காரணமாக தான் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கொலம்பியாவிட்கு தப்பிச் சென்றாள்.
என்றாலும் 1970 களின் இறுதிப்பகுதியில் மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பி மியாமி நகரில் குடியேறினாள்.
இக்காலப்பகுதியானது மியாமி நகரில் மரிஜுவானாவை விட கொக்கெய்ன் கடத்தல் உச்ச அளவில் இடம்பெற்றதொரு காலப்பகுதியாகும்.
1970களில் மியாமி நகரிற்கு திரும்பிய Blanco "Godmother of Cocaine" என்று புகழ் பெருமளவு போதைப் பொருள் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்தாள்.
அவள் கொக்கைன் போதைப்பொருளை அமெரிக்காவிற்குள் கொண்டு வருவதற்காக மற்றவர்கள் செய்யாத புதுமையான வழிமுறைகளைக் கையான்டாள்.
கொலம்பியாவிலேயே உள்ளாடைகள் தயாரிக்கும் கடை ஒன்றை நடாத்தியவள் அவள் உள்ளாடைகளுக்குள் ரகசியமாக மறைத்து வைத்து கொக்கைன் போதை பொருளை அமெரிக்காவிற்கு கொண்டு வந்தாள்.
அவள் தனது போட்டியாளர்களை வீழ்த்துவதற்காக இரக்கமற்ற கொடூர நடவடிக்கைகளை மேற்கொண்டதனால் Cocaine cowboy wars"என பெயர்பெற்ற வன்முறைகள் நீண்ட காலம் தொடர்ந்து வருடாந்தம் நூற்றுக்கணக்கான கொலைகள் இடம் பெறவும் காரணமாகியது.
Blanco 200க்கு மேற்பட்ட கொலைகளுக்கு உத்தரவிட்டிருப்பாள் என நம்பப்படுவதோடு பைக்கில் வரும் கொலையாளிகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி செல்லும் வழிமுறையையும் இவளே அறிமுகப்படுத்தினாள் என்றும் சொல்லப்படுகின்றது.
மேலும் அவளால் ஏவப்படும் கொலைகள் பெரும்பாலும் பட்டப்பகலிலேயே நடைபெறும்.
அவள் தன் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை தனது கொடூரத்தன்மையான அடியாட்கள் மூலம் வன்முறைகளை கட்டவிழ்த்து கட்டியெழுப்பினாள்.
அவர்கள் அவள் கட்டளையிடும் எதிராளிகளின் தலையில் சுடுவதோடு எதிரிகளோ அல்லது காவல்துறையோ கொலை செய்தது யார் என்று தெரிந்து கொள்ளும்படி ஆதாரங்களை விட்டு விடாமல் தப்பி வருவதிலும் வல்லவர்களாக இருந்தார்கள்.
அவளது வழிமுறையை நினைத்து ஏனைய போதைப் பொருள் புள்ளிகளே அஞ்சி நடுங்கினர்.
ஏனைய குழுவினர் ஏதாவதொரு நோக்கத்தை வைத்தே கொலை செய்தனர்.
அவர்கள் கொலை செய்வதற்கு முன்பு நன்றாக தீர விசாரித்த பின்னரே கொன்றனர்.
ஆனால் இவளோ முதலில் தன் எதிரியை கொலை செய்து விடுவாளாம்.
பின்னர் அவர் நல்லவன் என தெரிந்தால் "அவன் அப்பாவி தான் ஆனால் என்ன செய்ய இறந்து விட்டானே?" என சகஜமாகக் கூறுவாளாம்.
அவளின் நம்பிக்கைக்குரிய அடியாட்களின் ஒருவனான Ayala கூறும்போது "Blanco ஒருவனை இலக்கு வைத்து விட்டால் அவனை கட்டாயம் தீர்த்து கட்டியே ஆக வேண்டும். அது அப்பாவி மனிதனாக, பெண்களாக, குழந்தைகளாக இருந்தாலும் சரியே அவள் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்பட மாட்டாள்" என தெரிவித்தான்.
அவளின் மனதில் மருந்துக்கும் கூட இரக்கம் என்பது காணப்படவில்லை.
அவளுக்குரிய பணத்தை யாராவது உரிய நேரத்தில் செலுத்தவில்லையாயின் அவரும் அவரது குடும்பமும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்படுவர்.
அவள் யாருக்காவது பணம் கொடுக்க வேண்டி இருந்தால் அவர் கொல்லப்படுவார்.
யாராவது அவளை அலட்சியம் செய்வதாக அவள் உணர்ந்தாள் அவர் ஏமாற்றப்படுவார்.
மக்களும் அவளை நினைத்து அச்சத்துடனேயே இருந்தார்கள்.
ஏனெனில் அவள் போதைப் பொருள் கடத்தலை மேற்கொண்டதோடு தன் எதிரிகளை வெட்டி கொல்பவளாகவும் இருந்தாள்.
யாராவது அவளோடு நேருக்கு நேர் மோதினால் அவரை அவள் கொலை செய்து விடுவாள்.
அவளுடைய பிள்ளைகளோடு யாராவது முரண்பட்டால் அவளுடைய அடியாட்கள் அவரை தூக்கிக் கொண்டு சென்று எலும்புகளை உடைத்தும் தோலை உரித்தும் சித்திரவதை செய்து அவர் வலியால் துடிப்பதை பார்த்து ரசிப்பார்கள்.
போதைவஸ்து கடத்தல் கும்பல்களுக்கிடையிலான வன்முறைகள் காரணமாக 1980 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 75 கொலைகளும் அடுத்த ஏழு மாதங்களில் 169 கொலைகளும் இடம்பெற்றன.
1981களில் மியாமி நகரானது அமெரிக்காவில் மட்டுமல்ல முழு உலகிலேயே அதிக கொலைகள் இடம்பெற்ற ஒரு நகரமாக மாறியது.
1970களின் இறுதிப் பகுதிகளிலும் 1980களின் முற்பகுதியிலும் மியாமி நகரையே ஸ்தம்பிக்கச் செய்த Miami drug wars அல்லது Cocaine cowboy wars என அழைக்கப்பட்ட போதைப் பொருட்களுடன் தொடர்புடைய வன்முறைகளில் Blancoற்கும் பங்கு இருந்தது என்றே கூற வேண்டும்.
Blancoம் அவளது கணவரான Bravoம் 1970களில் மியாமி நகருக்கு சென்றபோது போதைப் பொருள் வர்த்தகமானது மாபியாக்களின் கைகளிலேயே இருந்தது.
என்றாலும் குறுகிய காலத்திலேயே இருவரும் சந்தையின் பெரும்பாலான பகுதியை தமது புதுமையானதும் வன்முறையானதுமான வழிமுறைகளினால் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
ஐந்தடி மாத்திரமே உயரம் கொண்டவள் போதைப் பொருள் வர்த்தகத்தில் எஜமானாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தாள்.
அவளது இரண்டாவது கணவனான Alberto Bravo என்ற போதைப்பொருள் கடத்தல் மன்னன் அவளது தொழில் பார்ட்னர் ஆகவும் இருந்தான்.
இருவரும் இணைந்து உருவாக்கிய போதைப்பொருள் வர்த்தகர் குழுவின் மூலமாக பெற்ற மில்லியன் கணக்கான இலாபத்தை Bravo திருடியதனால் இருவருக்கும் இடையில் 1975ஆம் ஆண்டு முரண்பாடு ஏற்பட்டது.
இதன் காரணமாக இருவரும் ஒரு நைட் கிளப் பாக்கிங்கின் அருகில் நேரடியாக மோதலில் ஈடுபட்டனர். இதுபற்றி கார்டியன் பத்திரிகை கூறும்போது
"அப்போது 32 வயது நிரம்பியிருந்த Blanco பிஸ்டலை வெளியில் எடுக்க பதிலுக்கு அவளுடைய கணவனும் துப்பாக்கியை அவளை நோக்கி நீட்டினான்.
இருவருக்குமிடையில் நடைபெற்ற சரமாரியான துப்பாக்கிச்சண்டையில் அவளது கணவனும் அவனுடைய ஆறு பாதுகாவலர்களும் சுடப்பட்டு பிணமாகக் கீழே விழுந்தனர்.
வயிற்றுப்பகுதியில் சிறியதொரு சூட்டுக் காயமடைந்த Blanco அதிலிருந்து விரைவிலேயே குணமடைந்ததோடு மியாமி நகருக்கு திரும்பி தன் தொழிலில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தாள்".
Blanco தன் இரண்டாவது கணவனை கொன்றதன் பின்பே அவளுக்கு "கறுப்பு விதவை" என்ற பெயர் வந்தது.
இவ்வாறான வன்முறைகளால் போதைப்பொருள் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்த Blanco உலகின் பணக்கார போதைப்பொருள் வர்த்தகப் பெண்ணாகவும் மாறினாள்.
அவள் வருடாந்தம் மூன்று டொன்களுக்கும் அதிகமான கொக்கையினை அமெரிக்காவுக்கு கப்பல் மற்றும் விமானம் மூலம் கொண்டு வந்ததாகவும் அதன் மாத பெறுமதி 80 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
தான் ஒரு பெரும் போதைப்பொருள் வர்த்தக புள்ளியாக இருப்பதை பெருமையாக கருதிய Blanco வசதியான வீடுகள்,குதூகலமான பார்ட்டிகள் நிறைந்த ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கே விரும்பினாள்.
சொகுசு கார்களையும் தனக்கென தனியான ஜெட் விமானமும் வைத்திருந்த Blanco மியாமி கடற்கரையில் தனக்கென சொந்தமாக வீட்டையும் கட்டி இருந்தாள்.
ஆர்ஜென்டீனாவின் முதல் பெண்மணியிடமிருந்து பெறுமதியான வைரங்களும் அவளிடம் இருந்தன.
கொலம்பியாவின் Catagena நகரில் வறுமையான சூழலில் வாழ்ந்தவளை போதைப்பொருள் வர்த்தகம் பில்லியன் கணக்கான சொத்துக்களுக்கு அவளை சொந்தக்காரியாக மாற்றியது.
போதைப்பொருள் வர்த்தகத்தில் முக்கிய புள்ளிகளாக இருந்தவர்களோடு பார்ட்டிகளில் அதிகளவில் பங்கெடுத்தாள்.
இப்படி அவள் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் அவளுடைய வன்முறை ரீதியான வாழ்க்கை சற்றும் குறைந்ததாக இருக்கவில்லை.
சிலரின் கூற்றின் படி பல ஆண்களையும் பெண்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டி தன்னோடு உறவு கொள்ள வைத்ததாக சொல்லப்படுகின்றது.
Blancoம் Bazooka என்ற கொக்கைன் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்தாள்.
இதனால் அவளுக்கு பின்னாட்களில் சித்தப்பிரமை நோய் அதிகரிக்க காரணமாகியது.
அமெரிக்கா முழுவதும் பரவியிருந்த Blancoன் போதைப்பொருள் நெட்வொர்க் ஆனது அவளுக்கு மாதாந்தம் 80 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டித் தந்தது.
அத்தோடு அவள் தன் வியாபாரத்தைப் பெருக்குவதற்காக வன்முறைரீதியான வழியை கையாண்டதால் அமெரிக்க அரசாங்கம் தெற்கு புளோரிடா பகுதியை கூடுதலாக கண்காணிக்க ஆரம்பித்தது.
இதன் காரணமாக அவளும் அவளுடைய குழுவினரும் அக்காலப்பகுதியில் சுதந்திரமாக தமது வர்த்தகத்தை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன் அவர்கள் மறைந்து செயற்பட வேண்டியும் ஏற்பட்டது.
1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவள் தனது போட்டியாளர்களுக்கு எதிராகவும் தனக்கு இடைஞ்சல் தரக்கூடியவர்களுக்கு எதிராகவும் வன்முறையை அதிகம் பிரயோகித்ததால் அவளுடைய போட்டியாளர்கள் அவளுக்கு எதிராக பல கொலை முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஒரு தடவை ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பிப்பதற்காக அவள் கலிபோர்னியாவுக்கு தப்பிச் செல்ல வேண்டி ஏற்பட்டது.
மியாமி நகருக்குள் கொக்கெயின் போதைப் பொருள் கொண்டு வரப்பட்டு அதன் காரணமாக நகரினுள் வன்முறைகளும் கொலைகளும் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க சட்டத்தினால் முடியாததன் காரணமாக அதனை கட்டுப்படுத்துவதற்காக மியாமி பொலிஸ் திணைக்களத்தினாலும் போதை பொருள் ஒழிப்பு அமைப்பினாலும் 26 என்ற புதியதொரு அமைப்பு நிறுவப்பட்டது.
1985 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் போதை பொருள் தடுப்பு நிலையத்தினால் அவளது வீட்டில் வைத்து அவள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டாள்.
அவள் சிறையில் இருந்தபோது சிறையிலிருந்து தப்பிக்க முயற்சித்ததனால் ஒரு தசாப்தத்திற்கும் அதிக காலம் சிறையில் வாழ வேண்டியேற்பட்டது.
என்றாலும் அவள் சிறையில் இருந்தபோதும் கூட தன்னுடைய மகனான Michael Blancoன் உதவியுடன் தன்னுடைய கொக்கெயின் வர்த்தகத்தை வெற்றிகரமாக கொண்டு சென்றாள்.
200க்கு மேற்பட்ட கொலைகளுடன் தொடர்புடைய Blancoற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் தீர்மானித்தனர்.
1994ஆம் ஆண்டு அவளின் முக்கிய கொலையாளிகளில் ஒருவனான Jeorge Ayala அவளுக்கு எதிராக சாட்சி சொல்ல முன்வந்தான்.
இதன் காரணமாக அவருக்கு எதிராக மூன்று கொலை குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அதில் அவளுடைய அமைப்பில் செயற்பட்ட முன்னாள் உறுப்பினர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சியில் அவருக்கு பதிலாக அவருடைய இரண்டு வயது மகன் கொல்லப்பட்டதும் உள்ளடங்கும்.
அவரை கொலை செய்வதற்கு அவள் உத்தரவிட்டதற்கு காரணம் "அவளுடைய இளைய மகனின் பின்பகுதியில் அவன் உதைத்ததினாலாகும்" என Ayala தெரிவித்திருந்தான்.
வழக்கறிஞர்கள் அவளிற்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றே நினைத்திருந்தனர்.
ஆனால் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட Ayala வழக்கறிஞர் காரியாலயத்தில் இருந்த பெண்களுடன் தொலைபேசி மூலம் தகாத முறையில் நடந்து கொண்டது உறுதிப்படுத்தப்பட்டதனால் அவனது நம்பகத்தன்மை கேள்விக்குரியாகியது.
இதனால் அவ்வழக்கில் அவளுக்கெதிராக கடும் தண்டனை விதிக்கப்படாமல் தப்பித்தாள்.
Ayala இவ்வாறு நடந்து கொண்டதற்கு காரணம் அவளுக்கெதிராக சாட்சி கூறினால் தான் அவளின் குழுவினரால் கொல்லப்படுவேன் என்பதனாலேயே இவ்வழக்கை திசைதிருப்புவதற்கு இவ்வாறு செய்திருக்கலாம் என சிலர் சந்தேகிக்கின்றனர்.
Blanco சிறையில் அடைக்கப்பட்டது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோது ஆக்லன்ட் பகுதி போதைப்பொருள் வியாபாரியான சார்ள்ஸ் கொஸ்பி அவளை சந்திக்க விரும்பினான்.
இருவருக்கும் இடையே நீண்டகாலம் கடிதத்தொடர்பு இருந்ததோடு இறுதியில் சிறை அதிகாரிகளுக்கு பணத்தை செலுத்தி விட்டு இருவரும் பெண்கள் சிறையில் சந்தித்தனர். சந்தித்தவுடனேயே இருவரும் காதலர்களாக மாறினர்.
கொஸ்பியை அவள் அதிகம் நம்பியதால் தன்னுடைய போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் பெரும்பாலான பகுதியை கொஸ்பியிடமே ஒப்படைத்தாள்.
Ayala அவளுக்கெதிராக சாட்சி சொல்லி அவளை மின்சாரக் கதிரைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததனால் அவள் கொஞ்சம் ஆடிப் போய் விட்டாள் என்றே கூற வேண்டும்.
என்றாலும் கொஸ்பியின் கூற்றுப்படி அவள் சிறையிலிருந்து விடுதலை பெறுவதற்காக அவளிடம் திட்டமொன்று இருந்ததாக குறிப்பிடுகின்றான்.
அவள் கொஸ்பியிற்கு குறிப்பெழுதிய துண்டொன்றை நழுவ விட்டதாகவும் அதில் "jkf 5m ny" என எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தான்.
அவன் மேலும் கூறுகையில் "இதற்கு என்ன அர்த்தம்? என அவன் அவளை தான் வினவியதாகவும் அப்போது கடத்தல் குழுவொன்றை ஏற்பாடு செய்து நிவ்யோர்க்கில் வைத்து அப்போதைய ஜனாதிபதி ஜோன்.எப். கென்னடியை கடத்தி வைத்துக்கொண்டு அவரை விடுவிக்க வேண்டுமெனில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கும்படியும் அவ்வாறு செய்தால் கடத்தல்காரர்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானமாக வழங்கப்படும் எனவும் அவள் கூறியதாக" தெரிவித்தான்.
கடத்தல்காரர்கள் அதை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்தனர்.
ஒரு கட்டத்தில் ஜோன்.எப். கென்னடி தன்னுடைய நாயுடன் நடைப்பயிற்சிக்காக வெளியே வந்தபோது கடத்தல்காரர்கள் அவரை பிடிப்பதற்கு சூழ்ந்திருந்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக தேசிய பாதுகாப்பு படையின் காரொன்று அவ்விடத்தைக் கடந்து சென்றதால் கடத்தல்காரர்கள் பயந்து அத்திட்டத்தை கைவிட்டனர்.
Blanco அந்த ஆபத்தான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அதிக துணிவுடையவளாக இருந்தாள்.
அதன்படி அவள் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் செய்தாள்.
ஆனால் எதிர்பாராதவிதமாக அம்முயற்சி கைகூடவில்லை.
Blanco சிறையில் இருந்தபோது 2002ஆம் ஆண்டு அவளுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
Blanco 2004ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கத்துடன் செய்துகொண்ட மீண்டும் அமெரிக்காவிற்கு வருவதில்லை என்ற பேரம் பேசுதலின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு கொலம்பியாவின் Modelin நகருக்கு நாடுகடத்தப்பட்டாள்.
2012 செப்டம்பர் 3ஆம் திகதி Blanco இருமுறை சுடப்பட்டு கொல்லப்பட்டாள்.
கொலம்பியா Modellin நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த கொலையாளியால் சுடப்பட்ட தோட்டாக்களில் ஒரு தோட்டா அவளது தலையிலும் மற்றைய தோட்டா அவளது தோள்பட்டையிலும் துளைத்து சென்றது.
அவள் நகரின் இருபத்தி ஒன்பதாம் தெருவின் மூலையிலிருந்த Cardiso என்ற இறைச்சி கடையில் இறைச்சி வாங்கிக் கொண்டு இருக்கும் போது மோட்டார் சைக்கிளின் பின் சீட்டில் உட்கார்ந்து வந்த மத்தியதர வயதுடைய துப்பாக்கிதாரி பைக்கிலிருந்து கீழே இறங்கி கடைக்குள் நுழைந்து அங்கு இறைச்சி வாங்கிக்கொண்டிருந்த Blancoஐ நோக்கி துப்பாக்கியை இயக்கினான்.
துப்பாக்கிதாரி இயக்கிய துப்பாக்கியிலிருந்து சென்ற இரண்டு தோட்டாக்கள் அவளைத் தாக்க அவள் அங்கேயே ஓவென அலறிக்கொண்டு சுருண்டு விழுந்து இறந்தாள்.
தான் வந்த வேலையை கனகச்சிதமாக முடித்ததை உறுதி செய்துகொண்ட துப்பாக்கிதாரி உடனடியாக பைக்கில் ஏறி நகருக்குள் நுழைந்து மறைந்து போனான். Blanco மரணிக்கும் போது அவளுக்கு வயது 69.
மியாமி பல்கலைக்கழகத்தின் சர்வதேச கல்விக்கான திணைக்களத்தின் தலைவரான பேராசிரியர் புரூஸ் பாக்லே கூறும்போது "இவளது முடிவானது கவித்துவமானதொரு நீதியாகும்.
எதிராளிகளை கொல்ல என்ன வழி முறையை அவள் பின்பற்றினாளோ அதே முறையிலேயே இவளும் கொல்லப்பட்டிருக்கின்றாள்".
"அவள் தன்னுடைய தொழிலில் கொடிகட்டிப்பறந்த காலத்தில் அதிகமான எதிரிகளை சம்பாதித்ததோடு கணக்கிலடங்காத எண்ணிக்கையான கொலைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவளாகவும் இருக்கின்றாள்."
"அவள் கொலம்பியாவிற்கு வந்த பிறகு முன்பிருந்தது போல நடந்து கொள்ளாவிட்டாலும் எல்லா இடத்திலும் எதிரிகளை சம்பாதித்து இருந்தாள்.
எதை நாம் கொடுக்கின்றோமோ அதுவே நமக்கு திரும்ப வரும்" என தெரிவித்தார்.
இப்படியானதொரு வழியிலேயே அவளுடைய மரணமும் இருக்கும் என பலரும் ஊகித்திருந்தனர்.
கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் மியாமி நகரின் போதைப்பொருள் வர்த்தகத்தை தன் கையிலேயே வைத்திருந்து அந்த நகரையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த அவளின் கதையானது பல டாக்குமென்டரிகளாகவும் திரைப்படங்களாகவும் தயாரிக்கப்பட்டன.
அவற்றில் அவள் மரணத்திற்கு முன்பிருந்தான வாழ்க்கையானது எழுத்தாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஒரு மிகச் சிறந்த கதை கருவாக அமைந்தது.
அவற்றில் Cocaine cowboys-I (2006), -II (2008) என்பன முக்கியமான திரைப்படங்களாகும்.
Blanco தனது இளைய மகனான மைக்கல் கர்லியோனை தனது மூன்றாவது கணவனான Dario Sepulceda வோடு வைத்திருந்தாள்.
1983ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டு அவளுடைய கணவன் அவளை விட்டு பிரிந்து செல்லும் போது மைக்கலை யார் பராமரித்து வளர்ப்பது என்பது தொடர்பில் கருத்து முரண்பாடு ஏற்படவே அவளுடைய கணவன் மகனை கடத்தி சென்று விட்டான்.
இதனால் கடும் கோபமடைந்த Blanco அவளது கணவனை தண்டிப்பதற்காக ஆட்களுக்கு பணம் கொடுத்து போலீஸ் வேடத்தில் அனுப்பி கொலம்பியாவில் வைத்து தன் மகன் கண்முன்னாலேயே தீர்த்து கட்டினாள்.
இதனால் அவளது மகனான மைக்கல் மியாமி நகருக்கு வந்து அவளுடனேயே சேர்ந்து கொண்டான்.
அவளின் புனைப் பெயரான "கறுப்பு விதவை" என்ற பெயருக்கேற்ப அவள் விதவையாகவே தன் வாழ்நாளில் பெரும்பாலான காலம் வாழ்ந்தாள்.
Miami New Times பத்திரிகையின்படி "மைக்கல் தன் இளமைப் பருவத்தை அடையும் முன்னரே தன் தந்தையையும், சகோதரர்களையும் இழந்திருந்ததோடு அவனின் குழந்தை பருவத்திலும் இளமைப் பருவத்திலும் அவனுடைய தாய் சிறையிலேயே இருந்தாள்.
இதனால் அவன் தனது தாய்வழி பாட்டியினாலும் சட்டரீதியான பாதுகாவலர்களாலுமே வளர்க்கப்பட்டான்".
2012ஆம் ஆண்டு கொக்கைன் கடத்தலுக்கு உதவினான் என்ற இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டான்.
2018ஆம் ஆண்டு ஒரு டாக்குமென்டரி தொடரில் தோன்றிய மைக்கல் அதிலே அவன் தன் இளமைக்காலத்தை தனிமையில் கழித்ததை பற்றி விபரித்திருந்தான்.
அத்தோடு 2019ஆம் ஆண்டு போதைப் பொருள் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்தவர்களின் பிள்ளைகளை வைத்து எடுக்கப்பட்ட டாக்குமென்டரி தொடரிலும் தோன்றினான்.
அவன் தன் தாயின் நினைவாக "Puro Blanco" என்ற பெயரில் துணி நிறுவனம் ஒன்றை நடாத்தி செல்வதோடு இதன் மூலம் தன் தாயான Blanco மீண்டும் உண்மை கிறிஸ்தவராக பிறந்திருப்பதாக தான் எண்ணுவதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
தெற்கு புளோரிடா பகுதியில் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் வர்த்தகம் விரிவடைவதற்கு ஒரு முன்னோடியாக Blanco கருதப்படுவதோடு கொலம்பியாவில் இருந்து மியாமி, நியூயோர்க், கலிபோர்னியாவிற்கான போதைப்பொருள் வர்த்தகத்தின் மிகப்பெரும் உருவமாகவும் வரலாற்றில் அவள் பதியப்படுகின்றாள்.
அத்தோடு அவளுடைய கல்நெஞ்சம் கொண்ட இரக்கமற்ற, கொடூரத்தன்மைக்காக மட்டுமின்றி ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ஆபத்தானதொரு துறையில் புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறந்ததற்காகவும் ஒரு பெண் தொழில் முனைவோராகவும் என்றும் அவள் நினைவுகூரப்படுவாள்.
ஆக்கம்:- M. R. அல்தாப் ஹசன்