நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்கா மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக எப்படி றக்பி விளையாட்டை மாற்றினார்

.


நிறவெறியின் காரணமாக கடுமையான முறையில் பிளவுபட்டிருந்த தென்னாபிரிக்க நாட்டினை உலக நாடுகள் மத்தியிலே பெருமைமிகுந்த ஒரு நாடாக காண்பிப்பதற்கு நெல்சன் மண்டேலா றக்பி விளையாட்டினை பயன்படுத்திக்கொண்டார்.

1995 ஜூன் 24ஆம் தேதி ஜொஹன்னஸ்பர்க் நகரில் உள்ள எலிஸ் பார்க் விளையாட்டு மைதானத்திலே இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலே தென்னாபிரிக்கா அணி தனது பரம போட்டியாளரான நியூசிலாந்து அணியை 15க்கு 12 என்ற கோல் கணக்கிலே வெற்றி பெற்றது.

அப்போட்டியானது தென்னாபிரிக்க நாட்டின் வரலாற்றிலே மிகப் பெருமைமிகுந்ததொரு அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

இவ் உலகக்கிண்ண றக்பி தொடரே தென்னாப்பிரிக்காவில் 1991ஆம் ஆண்டு பிரிவினைவாத நிறவெறி ஆட்சி நிறைவு பெற்றதன் பின்பு அங்கு நடைபெறும் முதலாவது பாரியதொரு விளையாட்டு நிகழ்வாகும்.

இப்பிரம்மாண்டமான விளையாட்டு தொடரிலே முழு சர்வதேச சமூகமும் பார்க்கின்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திரம்மிக்கதொரு நிகழ்வாக பிரிவினைவாதத்தினால் மிக மோசமாக பிரிந்திருந்த நாட்டை "ஒரே அணி,ஒரே நாடு" என்ற சுலோகத்தை பயன்படுத்தி தன்நாட்டினுடைய ஒற்றுமையை முழு உலகக்கும் காண்பிக்க வேண்டுமென ஜனாதிபதி நெல்சன் மண்டேலா திட்டமிட்டார்.

ஆனால் அந்நாட்டினுடைய உண்மை நிலவரம் அவர் நினைத்ததை விடவும் மிகவும் சிக்கலானதாக இருந்தது.

தென்னாபிரிக்க நாட்டில் வெள்ளையின நிறவெறி அரசாங்கத்தினால் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறைகள் அந்நாடு சர்வதேச ரீதியாக நீண்ட காலம் தனிமைப்படுவதற்கு காரணமாகியது.

1973 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையானது நிறவெறி என்பது மனிதத்தன்மைக்கு எதிரானது என தீர்மானம் நிறைவேற்றியது.

1964ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை அந்நாடானது ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்குபெற்ற தடை விதிக்கப்பட்டிருந்ததோடு அதன் றக்பி அணியானது றக்பி உலக கிண்ணத்தொடரின் 87 மற்றும் 91 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற முதலிரு தொடர்களில் பங்குபற்றுவதிலிருந்தும் தடுக்கப்பட்டது.

ஏனெனில் அந்நாட்டிலுள்ள கறுப்பினத்தவர்களுக்கு, பச்சை மற்றும் தங்க நிறங்களையும் காற்றில் பாய்ந்தோடும் மான் சின்னத்தையும்(Springbok) அடையாளமாகக்கொண்ட, வெள்ளையர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட அந்த றக்பி அணியானது, அந்நாட்டின் சிறுபான்மை வெள்ளையினத்தவர்களின் அடக்குமுறை ஆட்சியின் அடையாளமாக தெரிந்தது.


ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க நாட்டின் கறுப்பின மற்றும் வெள்ளையினத்தவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரிவினையை குறைத்து அந்நாட்டின் பெருமையை மேலோங்க செய்யக்கூடிய ஒரு வழிமுறையாக றக்பி விளையாட்டினை கருதினார்.

இதற்கு முன்பும் கூட அந்நாட்டு மக்கள் காலனித்துவ படைகளுக்கு எதிராக போராடும் போது வீரர்களை ஒற்றுமைப்படுத்தும் விதமாக விளையாட்டே இருந்தது.

1906 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க றக்பி அணியானது பிரிட்டிஷ் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமையானது இங்கிலாந்து மற்றும் ஆப்பிரிக்கர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோசமான பூவர் போரில் பங்குபற்றிய இருபக்க வீரர்களையும் உத்வேகப்படுத்தியது மட்டுமல்லாமல் நீண்டகாலமாக பிரித்தானிய வதை முகாமில் சிறைப்பட்டிருந்த ஒரு மாவீரருக்கும் கூட உத்வேகத்தை அளித்தது.

சிறுபான்மை வெள்ளையினத்தவர்களின் நிறவெறி முறைக்கு எதிராக போராடியதற்காக 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றிருந்த நெல்சன் மண்டேலா, இதற்கு முன்பு நிறவெறி கொடுமைகளால் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றுவதற்காக முதலில்  நிறவெறியினால் ஏற்பட்டுள்ள பரந்தளவிலான வலியையும் பிரிவினையையும் அங்கீகரித்து முதலில் அவர் உரையாற்ற வேண்டி இருந்தது.

தென்னாபிரிக்காவில் நீண்ட நெடுங்காலமாக இனரீதியான பாகுபாடு காணப்பட்டு வந்த நிலையில் 1948 ஆம் ஆண்டு ஐரோப்பிய வம்சாவளி ஆப்பிரிக்கர்களுக்கான தேசியக்கட்சி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியவுடன் நிறவெறியை அடிப்படையாகக் கொண்ட முறைமை அதிகாரப்பூர்வமாக அங்கு தோன்றியது.

தங்களைத்தாங்களே உயர் வர்க்கத்தினராக எண்ணிக்கொண்டிருந்த வெள்ளையின ஆப்பிரிக்கர்கள்,டச்சு, ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு வம்சாவளியை சேர்ந்தவர்கள் சிறுபான்மை வெள்ளையினத்தவர்களுக்கு ஆதரவான அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பாடுபட்டனர்.

கடுமையான வறுமை, தேசிய அரசியலில் எந்த வகிபாகமும் வகிக்க முடியாத நிலை, திறமையற்ற ஊழியர்களைத்தவிர ஏனையோருக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படல் போன்றவை காரணமாக நிறவெறி ஆட்சியில் பெரும்பான்மை கறுப்பினத்தவர்கள் ஒதுக்கப்பட்ட நகரங்களுக்கு இடம் பெயரத்தொடங்கினர்.

1953ம் ஆண்டு தனிவசதிகள் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் றக்பி மைதானம் உட்பட தென்னாப்பிரிக்காவிலுள்ள எல்லா பொது இடங்களும் அதிகாரப்பூர்வமாக வெள்ளையினத்தவர்களுக்கு மட்டும் என பிரிக்கப்பட்டன.

ஆப்பிரிக்க தேசிய கட்சியானது றக்பி அணியின் முதல் 90 வருடங்களுக்கு வெள்ளையர்களை மட்டுமே கொண்ட அணியொன்றை களமிறக்கும் அளவுக்கு அந்த அணியோடு நெருங்கிய பிணைப்பை கொண்டிருந்தது.

அக்கட்சியானது அவ் அணியின் வெற்றியை தனது சொந்த வெற்றியாக கொண்டாடிய அதே வேளை அணி வீரர்கள் தமது அணியை கட்சி நிலைகளுக்கான ஊஞ்சல் பலகையாக பயன்படுத்தினர்.

"தேசிய கட்சியினர் தென்னாப்பிரிக்காவுக்கே உரிய குதிக்கும் மானின்(Springbok) அடையாளத்தை வெள்ளையின ஆப்பிரிக்கர்களின் பெறுமானங்களையும் பண்புகளையும் பிரதிபலிக்கும் ஒன்றாகவே எண்ணிக் கொண்டிருந்தனர்" என Simon Pinsky என்ற எழுத்தாளர் குறிப்பிடுகின்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் "அவர்களுடைய புனிதமான சீருடையை கறுப்பின விளையாட்டு வீரர்கள் அணிய அனுமதிப்பதானது அவர்களுடைய அந்த பெறுமானங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதற்கு எடுத்து வைக்கும் முதலடியாகும் என்ற எண்ணமே அவர்களிடம் காணப்பட்டது. 

குதித்தோடும் மானானது(Springbok) வெள்ளையின ஆப்பிரிக்கர்களின் றக்பி விளையாட்டு திறமையின் அடையாளம் என்பதையும் தாண்டி அது அவர்களுடைய இன மேம்பாட்டை வெளிக்காட்டும் அடையாளச்சின்னமாகவே இருந்தது" என குறிப்பிடுகின்றார்.

நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து வெளியாகி ஐந்து ஆண்டுகளும் ஜனாதிபதியாக தெரிவாகி ஒரு ஆண்டும் பூர்த்தியாகியிருந்த நிலையில் 1995ம் ஆண்டு நிறவெறியோடு தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்காக உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்தார்.

நிறவெறி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் பற்றிய முழுமையான உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே இனரீதியாக பிளவுபட்டிருக்கும் நாட்டை ஒற்றுமைப்படுத்த ஒரு காரணியாக இருக்கும் என ஆணைக்குழு முழுமையாக நம்பியது.

கறுப்பின தென்னாபிரிக்கர்கள் நிறவெறி ஆட்சியின் எந்த அடையாளச்சின்னமும் தென்னாபிரிக்காவில் இருக்கக் கூடாதென நினைத்தனர். 

அதிலும் குறிப்பாக றக்பி அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத்தரும் அடையாளச்சின்னமாகவும் நிறவெறி தேசிய கட்சியின் விளையாட்டு குறியீடாகவும் 1906ம் ஆண்டிலிருந்து இருக்கும் குதிக்கும் மானின்(Springbok) அடையாளத்தை இல்லாது ஒழிக்க வேண்டுமென உறுதியாக நம்பினர்.

1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது சுதந்திரத் தேர்தலுக்குப் பிறகு தென்னாபிரிக்கா நாட்டின் றக்பி அணியைத் தவிர மற்ற எல்லா தேசிய அணிகளும் அந்நாட்டின் தேசிய மலரான Proteaஐ தமது அடையாளச் சின்னமாக ஏற்றுக்கொண்டன.

றக்பி விளையாட்டானது ஒரு மிகப்பெரிய தேசிய பொழுதுபோக்காக இருந்த ஒரு நாட்டில் பச்சை மற்றும் தங்க நிறங்களையும் குதித்தோடும் மானின்(Springbok) அடையாளம் கொண்ட அதன் சின்னத்தை கைவிடுவதற்கு பல வெள்ளையின தென்னாபிரிக்கர்களுக்கு மனம் வரவில்லை.

தமது அடையாளச் சின்னத்தை கைவிட்டு விட்டு மாற்றமொன்றை எதிர்கொள்வதற்கு வெள்ளையின தென்னாபிரிக்கர்களுக்கு இருக்கின்ற தயக்கத்தை புரிந்து கொண்ட மண்டேலா, நாட்டை ஒன்றுபடுத்துவதற்கான ஒரு வழிமுறையாக வெள்ளையின தென்னா பிரிக்கர்கள் அவர்களுடைய நம்பிக்கைக்குரிய சின்னத்தை வைத்திருக்கும் படியான சமரச நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

"1960களில் நெல்சன் மண்டேலா வெள்ளை இனத்தவர்களின் மொழியான ஆப்ரிக்கான் மொழியினை கற்க ஆரம்பித்ததாக" 2008ம் ஆண்டு மண்டேலாவின் 90வது பிறந்த நாளையொட்டி "டைம்" சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் Richard Stangel குறிப்பிடுகின்றார்.

அவர் மேலும் கூறும்போது "மண்டேலா இவ்வாறு செய்வதை அறிந்து கொண்ட ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸிலிருந்த அவரது தோழர்கள் அதுபற்றி அவரை வன்மையாக கண்டித்தனர். 

என்றாலும் வெள்ளையின ஆப்பிரிக்கர்களின் உலகம் பற்றிய பார்வையை புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர்களது மொழியை அறிந்து வைத்திருக்க வேண்டுமென மண்டேலா நினைத்தார். 

ஏனெனில் என்றோ ஒருநாள் அவர் அவர்களோடு சண்டையிடவோ அல்லது சமாதான பேச்சு வார்த்தைகளிலோ ஈடுபடவேண்டும் என்றும் அதில் எது நடந்தாலும் அவரது முடிவு அவர்களிடத்திலேயே தங்கியுள்ளது என்பதையும் அவர் தெரிந்து கொண்டிருந்தார்."

1994ம் ஆண்டு அவர் உரையாற்றிய தொடக்க விழாவிலே "சமாதானத்துடன் கூடிய வானவில் தேசம்" என்ற தனது தூர நோக்கிற்காக அறைகூவல் விடுத்தார்.

அதன் முதல் படியாக தனது முதலாவது ஆட்சித் தவணையில் கருப்பின மற்றும் வெள்ளையின மக்களுக்கிடையில் இல்லாமல் போயிருக்கின்ற சமாதானத்தை மீண்டும் உருவாக்குவதற்காக பாய்ந்து ஓடும் மான்(Springbok) சின்னமானது எப்படி ஒரு உதவியாக அமையும் என்பது பற்றி கலந்துரையாடுவதற்காக தன்னை சந்திக்கும்படி தென்னாபிரிக்க றக்பி தேசிய அணியின் தலைவரான Francois Pienaarக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால் தென்னாபிரிக்க றக்பி அணி தலைவரான Pienaarவோ, மண்டேலா ஒரு தீவிரவாதி என்றும் கெட்ட மனிதர் என்றும் சிறுவயதிலிருந்தே சொல்லி வளர்க்கப்பட்ட வெள்ளையின ஆப்பிரிக்க சமூகத்தை சேர்ந்தவராகும்.

அதே நேரம் மறுபுறத்தில் மண்டேலா தனது கறுப்பின மக்களை பார்த்து "நீங்கள் இந்த வீரர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால் அவர்கள் எம்மைச் சார்ந்தவர்கள்" என்று தெரிவித்தார்.

ஆனால் நெல்சன் மண்டேலா கடும் இனவாத நிறவெறி ஆட்சியாளர்களுடன் மேற்கொண்டிருந்த சமரச நடவடிக்கைகள் கறுப்பின ஆபிரிக்கர்களுக்கு எந்த ஈர்ப்பையும் வழங்கவில்லை. 

அவர்கள் மனதில் இன்னும் வெள்ளையின ஆட்சியாளர்களின் அடக்குமுறை மற்றும் வன்முறை நிறைந்த ஆட்சியே ஓடிக்கொண்டிருந்தது.

இதற்கு உதாரணமாக 1976ம் ஆண்டு  கறுப்பினத்தவர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய குடியேற்ற நகரான Soweto நகர்புறத்தில் இடம்பெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தின் போது மட்டும் தென்னாபிரிக்க காவல்துறையினர் நூற்றுக்கணக்கான கறுப்பினத்தவர்களை கொன்றொழித்ததோடு ஆயிரக்கணக்கானவர்களை காயப்படுத்தியும் இருந்தனர்.

1994ம் ஆண்டு தேர்தலுக்குப் பின் மண்டேலா மட்டுமின்றி அவரது ஆளும் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸும் கூட முன்னைய நிறவெறி ஆட்சியாளர்களோடு இணக்கமாக செயல்படுவதாக நம்பிய கறுப்பின போராட்டக் குழுக்களின் பலத்த கண்டனங்களுக்கு உள்ளானார்.

அவருக்கு எதிரான விமர்சனங்களில் தலையாயதுதான் மண்டேலா கறுப்பின தென்னாபிரிக்கர்களுக்கு உரிமைகளை பெற்றுத்தர முயற்சிப்பதை விட வெள்ளை இனத்தவர்களை சமாதானப்படுத்துவதிலேயே கூடுதல் கரிசனையோடு இருப்பதாக நம்பிய அவரது மனைவியான வின்னி மண்டேலா அவரை விட்டு பிரிந்து சென்றதாகும்.

இவ்வாறான பலத்த விமர்சனங்களுக்கு மண்டேலாவும் அவரது ஆளும் கட்சியும் முகம் கொடுத்தாலும் கூட சிறுபான்மை வெள்ளை இனத்தவர்களோடு வலுவானதொரு வேலை உறவை கட்டி எழுப்புவதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.

கறுப்பின தென்னாபிரிக்கர்களுக்கான அவரது வேண்டுகோள்கள் யாவும் நாட்டைப் பற்றியதான அவரது பெரிய இலக்குகளுக்கு அவர்கள் ஆதரவு வழங்குவதன் மூலமே அடைய முடியும் என அவர் வலுவாக நம்பினார்.

"நாம் இந்த இளைஞர்களை எம் வீரர்களாக, எங்கள் சொந்த பிள்ளைகளாக, எங்கள் சொந்த நட்சத்திரங்களாக பார்க்கின்றோம்" என உலகக்கிண்ணம் ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தென்னாபிரிக்க வீரர்களின் பயிற்சி முகாமிற்கு சென்றிருந்தபோது நெல்சன் மண்டேலா குறிப்பிட்டார். 

"இந்த நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றது. எமது வீரர்களை பற்றி இப்போது பெருமையாக எண்ணுவதைப் போல இதற்கு முன் ஒருபோதும் நான் எண்ணியதில்லை அந்தப் பெருமையை எல்லோரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நான் நம்புகின்றேன்" என அவர் மேலும் தெரிவித்தார்.

1995 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திலே நியூசிலாந்திற்கு எதிரான இறுதிப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு எலிஸ் பார்க் மைதானத்தில் கூடியிருந்த பெரும்பாலும் வெள்ளை இனத்தவர்களை உள்ளடக்கியிருந்த 65,000 ரசிகர்கள் Springbok பாடலோடு சேர்த்து புதியதொரு தேசிய கீதத்தையும் பாடினர்.

அந்தப் பாடலானது நிறவெறி காலத்தில் பாடப்பட்ட வரிகளையும் நிறவெறிக்கு எதிரான ஆபிரிக்க புரட்சி சங்கீதத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது.

நெல்சன் மண்டேலா பச்சை நிற தென்னாபிரிக்க றக்பி அணி சீருடையை அணிந்தவாறு அரங்கத்தில் தோன்றிய போது அங்கு கூடியிருந்த பெரும்பாலான வெள்ளையின ஆப்பிரிக்கர்கள் "நெல்சன், நெல்சன், நெல்சன்" என கரகோஷமிட்டனர்.

எல்லா இனங்களும் இணைந்து முழு தேசமும் ஒற்றுமையோடு இருக்கின்ற அந்த வரலாற்றுரீதியானதும், அடையாளப்படுத்த கூடியதுமான காட்சியை முழு உலகமும் பார்ப்பதற்காக போட்டிகள் தொடங்குவதற்கு முன்னைய வாரங்களில் மண்டேலா மேற்கொண்ட பணிகளை அந்த போட்டி வெளிப்படுத்தியது.

இறுதிப் போட்டியிலே போட்டி நேரம் முடிவடைந்த போது இரு அணிகளும் ஒன்பதுக்கு ஒன்பது என சமநிலையில் இருந்தன. 

பிறகு மேலதிக நேரம் வழங்கப்பட்டு போட்டி முடிவடைவதற்கு ஏழு நிமிடங்கள் எஞ்சியிருந்த போது தென்னாப்பிரிக்க அணி கோல் ஒன்றை பெற்றதனால் இறுதியில் அவ்வணி 15க்கு 12 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் தடவையாக றக்பி உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.

முழு தென்னாபிரிக்க நாடும் வெற்றி கொண்டாட்டத்தில் அதிர்ந்தது. 

வெள்ளை இனத்தவர்களை போல கறுப்பினத்தவர்களும் சந்தோஷத்தில் திளைத்திருந்தனர்" என Martin Meredith என்பவர் தனது மண்டேலா பற்றிய நூலில் குறிப்பிடுகின்றார்.

தென்னாபிரிக்க நாட்டின் கறுப்பினத்தவர்கள் தங்கள் நாட்டின் வெள்ளை இனத்தவர்களின் திறமைக்காகவும் முயற்சிக்காகவும் அப்போது பெருமையோடு மகிழ்ச்சியடைந்ததைப் போல இதற்கு முன் ஒருபோதும் மகிழ்ச்சியடைந்ததில்லை. 

முழு நாடுமே ஒன்றாக இணைந்து குதூகலிக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக அது அமைந்திருந்தது.

"போட்டியினுடைய இறுதி விசில் சத்தம் ஒலித்தபோது நாடு என்றும் இல்லாதவாறு மாற்றமடைந்தது" என அவ் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக பதவி வகித்த Pienaar போட்டி நடைபெற்று பல வருடங்களுக்குப் பின் மண்டேலா இறந்த சமயத்தில் அச்சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

நிறவெறிக்கு பிந்தியதான உலகில் சமூகத்தின் கீழ்மட்ட நிலையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த கறுப்பின தென்னாபிரிக்கர்களுக்கு இது மிகையானதாக கூறப்பட்டாலும் நாட்டின் காயங்களை குணப்படுத்துவதற்காக மண்டேலா றக்பி விளையாட்டை ஒரு கருவியாக பயன்படுத்தியதன் திறமையானதும் மதிநுட்பமானதுமான முயற்சியை அது பிரதிபலித்தது.

ஆனால் Springbok சின்னமானது கொடூரமான நிறவெறி ஆட்சியையே தொடர்ந்தும் பிரதிநிதித்துவம் செய்வதாக தென்னாபிரிக்க நாட்டின் பல கறுப்பினத்தவர்கள் இன்றும் எண்ணுகின்றனர்.

1995ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளின் போது ஒரே ஒரு கறுப்பின வீரரே அணியில் இடம் பெற்றிருந்ததோடு 2019ம் ஆண்டு கறுப்பின அணித் தலைவரின் தலைமையில் இங்கிலாந்து அணிக்கெதிராக உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய போது ஆறு வீரர்கள் மட்டுமே அணியில் இடம் பெற்றிருந்தனர்.

"1995ம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் போது நெல்சன் மண்டேலா கையசைத்தது தென்னாபிரிக்க நாட்டின் நல்லிணக்கத்தின் உருவகமாக பார்க்கப்பட்டது போல றக்பி விளையாட்டிலும் அந்த நல்லிணக்கம் ஏற்படாமல் போனது தென்னாபிரிக்க நாட்டிலே எந்தவித பொருளாதார சுதந்திரமுமின்றி வெறுமனே அரசியல் சுதந்திரம் மாத்திரம் பெற்றிருந்த கறுப்பினத்தவர்களின் மத்தியில் ஏற்பட்ட ஏமாற்றத்தின் உருவகமாகவும் பார்க்கப்படுகிறது" என ஊடகவியலாளரான டேவிட் ஸ்மித் 2015ம் ஆண்டு கார்டியன் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

என்றாலும் தன்னுடைய பழைய காயங்களில் இருந்து மீள்வதற்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்காக றக்பி விளையாட்டை ஒரு கருவியாக பயன்படுத்துவதற்கு நெல்சன் மண்டேலா மேற்கொண்ட முயற்சிகளானது அவர் தென்னாப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியாக அடைந்த மிகச்சிறந்த அடைவுகளில் ஒன்றாகும் என்பதோடு விளையாட்டின் மூலமாக எவ்வளவு அற்புதமான விடயங்களை அடைய முடியும் என்பதற்கும் ஒரு  முன்னுதாரணமாகவும் திகழ்கின்றது.

2000ம் ஆண்டு இடம்பெற்ற லாரஸ் உலக விளையாட்டு விருது வழங்கும் விழாவிலே பேசிய மண்டேலா "இந்த உலகையே மாற்றக்கூடிய வல்லமை இந்த விளையாட்டிற்கு இருக்கின்றது. எங்கு நம்பிக்கையீனம் நிறைந்திருந்ததோ அங்கே நம்பிக்கையை ஊட்டுவதற்கும் விளையாட்டினாலேயே முடியும்" என தெரிவித்திருந்தார்.

ஆக்கம்:-அல்தாப் ஹசன் 

மூலம்:-https://www.history.com/news/nelson-mandela-1995-rugby-world-cup-south-african-unity



1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post