1727 செப்டம்பர் 2-ம் திகதி பிறந்த Angel Beek பிரித்தானிய படை இலங்கையை கைப்பற்றுவதற்கு முன்பு இலங்கையில் இருந்த ஒல்லாந்த காலனித்துவத்தின் இறுதி கட்டளை அதிகாரியாக (ஆளுநராக) செயற்பட்டார்.
1751 ஆம் ஆண்டு நெதர்லாந்திலிருந்து புறப்பட்டு இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் Bavatia போன்ற இடங்களுக்கு சென்றவர் 1755 ஆம் ஆண்டு மீண்டும் நெதர்லாந்து திரும்பினார்.
1756 ஆம் ஆண்டு டச்சு கிழக்கு இந்திய கம்பெனியில் இணைந்து இந்து சமுத்திரப்பகுதிக்கு விஜயம் செய்து Bavatia மற்றும் பெங்கால் பகுதிகளில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
1764 ஆம் ஆண்டு டச்சு இலங்கையின் தலைநகரான கொழும்பிலே சட்டம் நீதி அதிகாரங்கள் கொண்ட அரசாங்க பதவியொன்றை பெற்றவர் 1767ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள தூத்துக்குடி துறைமுகத்தில் கூப்மேனாக கடமையாற்றினார்.
பின்னர் 1770 ஆம் ஆண்டு துறைமுகத்தின் மூத்த அதிகாரி என்ற பொறுப்பை ஏற்று 1783 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார்.
1783 ஆம் ஆண்டு இந்தியாவின் மலபார் பகுதிக்கு நியமிக்கப்பட்டதோடு 1787 ஆம் ஆண்டு முழு டச்சு இந்தியாவினதும் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
1794 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரெஞ்சு புரட்சி யுத்தத்தின் போது இலங்கை டச்சு கொலனியினது கட்டளை அதிகாரியாக செயல்பட்டதோடு அடுத்த வருடம் பிரித்தானிய படை இலங்கை வந்த போதும் கட்டளை அதிகாரியாக செயல்பட்டார்.
ஒல்லாந்து துறைமுகங்கள் ஒவ்வொன்றும் பிரித்தானியரின் படையெடுப்பில் விரைவாக விழ இறுதியாக கொழும்பு துறைமுகமும் 1796 ஆம் ஆண்டு பிரித்தானியர் வசம் சென்றது.
என்றாலும் தொடர்ந்தும் இலங்கையில் வாழ்ந்தவர் 1799ம் ஆண்டு செப்டெம்பர் இரண்டாம் தேதி மரணித்தார்.
இலங்கையில் 152 வருடங்கள் ஆட்சி செய்த பிரித்தானியர் இலங்கையை கைப்பற்ற முன்னர் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தரின் இறுதி ஆளுநராக செயல்பட்டார். அவர் திருமணம் செய்து அவருக்கு இரண்டு பிள்ளைகளும் இருந்தனர்.
ஆளுநர் மரணித்து அடுத்த நாள் அவரது இறுதி சடங்குகள் இடம் பெற்றன. அது பற்றிய தகவல்களை பாதிரியாரான James Cordinar என்பவர் குறிப்பிடும்போது "டச்சு ஆளுநரின் இறுதி ஊர்வலமானது 1799 செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் கொழும்பின் வீதிகளில் கொண்டு செல்லப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தில் கறுப்பு கவுண் அணிந்த அழுது புலம்பும் பெண்கள் குழுவினரும் ஐரோப்பாவினை சேர்ந்த எல்லா குடியேற்ற முக்கியஸ்தர்களும். ஆளுநரின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஆளுநரின் உடலானது, சவப்பெட்டி உரையின் கண்ணாடி மூலம் எலும்புக்கூடு விளங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியின் அருகில் அவர்களது குடும்ப பெட்டகத்தில் வைக்கப்பட்டது. அங்கே புதைப்பதற்கான எந்த செயற்பாடும் இடம் பெறவில்லை. ஆனால் அவசியமான விடயங்கள் இடம் பெற்ற பின் பறையறைபவன் ஒருவன் கல்லறையொன்றின் மீதேறி "நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது வந்திருப்பவர்கள் அனைவரும் கலைந்து செல்லலாம்" என சத்தமாக அறிவித்தான். பறையறைபவன் இவ்வாறு அறிவித்தவுடன் அங்கு வந்திருந்த முக்கியஸ்தர்கள் அனைவரும் ஆளுநரின் வாசஸ்தலத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அங்கே பாரிய எண்ணிக்கையிலான பெண்கள் குழுமியிருந்ததோடு அங்கிருந்த அறைகள் அனைத்தும் பல நாடுகளையும் சேர்ந்த முக்கியஸ்தர்களால் விரைவாக நிரம்பியது காணப்பட்டது. அவர்களனைவரும் அன்றைய மாலை முழுவதையும் விதவிதமான மது வகைகளை ருசிப்பதிலும் புகைப்பதிலும் கழித்தனர்".
1813 செப்டம்பரில் டச்சு ஆளுனரின் எச்சங்கள் ஒல்லாந்த கோட்டை தேவாலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு வொல்பென்டார் தேவாலயத்தில் வைக்கப்பட்டது.
ஆளுநரின் மனைவி மற்றும் மகளுக்கென நினைவுச்சின்னங்கள் உள்ளபோதும் ஆளுநருக்கென எந்தவிதமான நினைவுத்தூபிகளும் கொழும்பில் இல்லை என்பது முக்கியமான விடயமாகும்.
டச்சு ஆளுநரின் மாளிகையானது கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரியதும் மிகச்சிறந்ததுமான வாசஸ்தலமாகும்.
அம்மாளிகையானது டச்சு ஆளுநரின் பேத்தியினால் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் ஆளுநர் மாளிகையாக பயன்படுத்தப்படுவதற்காக பிரிட்டிஷாருக்கு பத்தாயிரம் பவுண்களுக்கு விற்கப்பட்டது.
மேலும் அம்மாளிகையை அப்போதைய முழு பிரித்தானிய இலங்கை தீவினதும் ஆளுநராகவும் கடமையாற்றிய தோமஸ் மைட்லன்ட் கைப்பற்றி தனது வாசஸ்தலமாக பயன்படுத்தினார்.
அம்மாளிகையானது பிரதான வீதியில் அமைந்துள்ளதோடு இரண்டு மாடிகளை கொண்டதுமாகும்.
மேல் மாடியின் ஒரு பக்கத்திலிருந்து கடல், வீதி மற்றும் துறைமுகம் போன்ற விசாலமான விடயங்களையும் மற்றைய பக்கத்திலிருந்து குளம், புறக்கோட்டை, இலவங்கப்பட்டை போன்ற வளமான விடயங்களையும் சிவனொளிபாதமலை மற்றும் சிறிய மலைகளை எல்லைகளாகக் கொண்ட உள்நாட்டு பிரதேசங்களின் விசாலமான பகுதிகளையும் பார்க்க முடியும்.
பிரிட்டிஷ் ஆட்சி காலப்பகுதியில் அம்மாளிகையானது "மன்னரின் இல்லம், "மகாராணியின் இல்லம்" என பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த ஆட்சியாளரை பொறுத்து அழைக்கப்பட்டு வந்ததோடு 1804 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 29 பிரிட்டிஷ் ஆளுநர்களதும் ஆறு இலங்கை ஜனாதிபதிகளினதும் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்தப்பட்டது.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின் இலங்கை ஆளுநர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக இருந்தது.
1954 ஆம் ஆண்டு சேர் ஒலிவர் குணத்திலக இலங்கையின் ஆளுநராக நியமிக்கப்பட்ட போது முதலாவதாக இம்மாளிகையை பயன்படுத்தினார்.
1962 மார்ச் இரண்டாம் தேதி வில்லியம் கோபல்லாவ அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதோடு பின்னர் இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
1954ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணி மன்னர் பிலிப்புடன் இலங்கை வந்திருந்த போது இம்மாளிகையிலேயே தங்கினார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியே இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவதும் ஒரே ஒரு மன்னர் குடும்பத்தை சேர்ந்தவராகும்.
அத்தோடு அவர் கொழும்பு நகர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு இரண்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரையும் ஆரம்பித்து வைத்தார்.மேலும் அவர் அனுராதபுரம், பொலனறுவை, கண்டி, மற்றும் நுவரெலியா பகுதிகளுக்கும் விஜயம் செய்தார்.
1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக மாறிய பின் ஜனாதிபதி செயலகமாக பெயர் மாற்றப்பட்டது பின்னர் தலைநகரில் உள்ள பழைய பாராளுமன்ற சட்ட ஜனாதிபதி செயலகமாக மாறிய பிற்பாடு அது நாட்டின் உயர் பதவியில் இருப்பவரின் உத்தியோகப்பூர்வ இல்லமாக மாறியது.
1980களில் இம்மாளிகையானது கவனிப்பாரற்று இருந்ததோடு பல வருடங்களுக்குப்பின் 1990களில் இலங்கையின் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான ஜெப்ரி பாவாவால் புனரமைக்கப்பட்டது.
ஜே. ஆர். ஜெயவர்த்தன இலங்கையின் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக பதவியேற்றபின் இம்மாளிகையானது முன்பிருந்தது போல பிரம்மாண்டமாக மாற்றப்பட்டதோடு அரச வைபவங்களுக்கும் அரச விடயங்களுக்குமென பயன்படுத்தப்பட்டது.
2016ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகமானது ஒரு வாரம் பாடசாலை மாணவர்களுக்கென திறக்கப்பட்டது. என்றாலும் சாதாரண மக்களும் கூட ஜனாதிபதி செயலகத்தை பார்வையிடுவதற்கான வாய்ப்பாக இது அமைந்தது.
இம்மாளிகையானது தற்போது இலங்கையின் பேசுபொருளான ஒரு விடயமாக இல்லாவிடினும் இலங்கையில் வரலாற்றில் முக்கியத்துவமிக்கதொரு மாளிகையாக இடம்பெறுகின்றது.
