"கல்கொடியான" என்ற தீவானது இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்திலே "போல்ஹேன" என்ற கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. அத்தீவிலே காணப்படும் தூபியின் சிதைவுகள் புராதன இலங்கையின் ஏனைய பௌத்த மத வடிவங்களை விடவும் முற்றிலும் வேறுபட்டதாக காணப்படுகின்றன.
இன்று "ஸ்நோர்கெல்லிங்" விளையாட்டிற்கு புகழ்பெற்று விளங்கும் இந்த தீவானது முன்பொரு காலத்திலே தாய்லாந்து நாட்டு இளவரசரான "Prisdang. Chunsai"ன் இல்லமாக இருந்ததாக சிலர் குறிப்பிடுகின்றனர்.
அவர் தன்னுடைய நாட்டு மன்னரை பதவி கவிழ்க்க முயற்சித்ததாக பொய்யாக வீண்பழி சுமத்தப்பட்டதனால் இலங்கையில் ஒரு பௌத்த துறவியாக புதியதொரு வாழ்வை வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய சொந்த நாடான தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்திருந்தார்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இளவரசர் Prisdang வருவதற்கு முன்னர் கல்கொடியான தீவானது அருகிலிருந்த கிராமவாசிகள் தங்களது இறந்த உறவினர்களை அடக்கம் செய்யவும் விஷப்பாம்புகளை தூக்கி எறியவும் இத்தீவை பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தீவானது ஆரம்பத்திலே ஒரு தீவாக காணப்படவில்லை, மாறாக மாத்தறை நிலப்பரப்பின் ஒரு பகுதியாகவே காணப்பட்டது. கடலரிப்பினால் இது ஒரு தீவாக மாறியதோடு 1900 ஆம் ஆண்டு வரை மக்கள் வசிக்காத ஒரு இடமாக விளங்கியதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்கொடியான என்ற பெயரானது நாடுகான் பயணியான Van Doser என்பவரால் 1766 ஆம் ஆண்டு பெயர் சூட்டப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
இளவரசர் Prisdang தாய்லாந்து மன்னர் Nangklaoன் மூத்த மகனாக 1851 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தைக்கு Chulalongkorn என்ற பெயரும் உண்டு.
இளவரசர் அரச குடும்பத்தை சேர்ந்தவராக இருந்ததனால் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவருக்கு திட்டியது.
தனது ஆரம்பக் கல்வியை சிங்கப்பூரில் பெற்றதோடு 1871 ஆம் ஆண்டு இலண்டனிலுள்ள King's கல்லூரியில் பொறியியல் துறையில் கல்வி கற்பதற்காக பெரிய பிரித்தானியாவிற்கு சென்றார். அங்கு அவர் 1876 ஆம் ஆண்டு சிறந்த பெறுபேறுகளோடு தனது பட்டப் படிப்பை பூர்த்தி செய்தார்.
அக்கால பகுதியில் ஐரோப்பிய நாடொன்றில் பல்கலைக்கழக பட்டமொன்றை பெற்ற முதலாவது தாய்லாந்து நாட்டவராக அவரே காணப்பட்டார்.
இளவரசர் Prisdang 1881 ஆம் ஆண்டு இங்கிலாந்திலே முதலாவது நிரந்தர தூதுவராலயத்தை நிறுவி அடுத்து வந்த ஐந்து வருட கால பகுதியில் பதினோரு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தூதுவராக பணிபுரிந்து அந்நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளை உருவாக்குவதில் வெற்றி கண்டார்.
வெளிநாடுகளுடனான நட்புறவான இராஜதந்திர தொடர்புகள் மூலமாக தன்னுடைய நாடான தாயிலாந்தை அபிவிருத்தி அடையச் செய்வதே அவரது மிக முக்கிய குறிக்கோளாக இருந்தது.
அந்த அடிப்படையில் 1855 ஆம் ஆண்டு பிரித்தானியா அரசாங்கத்தோடு உடன்படிக்கைகளை மேற்கொண்டு தாய்லாந்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளை ஸ்தாபித்ததோடு சர்வதேச தபால் ஒன்றியத்தில் தாய்லாந்து உறுப்புரிமையை பெறுவதற்கும் முக்கிய காரண கர்த்தாவாக விளங்கினார்.
Tomara Loos எழுதிய "Bones Around My Neck" என்ற சுயசரிதை நூலின் படி இளவரசர் பாரிஸ் நகரில் இராஜதந்திரியாக கடமையாற்றிக் கொண்டிருந்தபோது தாய்லாந்தில் ஜனநாயக அரசியல் அதிகாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று நன்நோக்கிலே 1885 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு திட்டத்தை கொண்டு வந்தார்.
அவரினுடைய இலங்கைக்கான முதல் விஜயம் 1886 ஆம் ஆண்டு இராஜதந்திரியாக தொடர்ந்தும் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது இடம் பெற்றது.
இலங்கையின் பௌத்த மத மறுமலர்ச்சிக்கான முன்னோடி செயற்பாட்டாளர்களில் ஒருவரான வண. மீதொட்டுவத்த குணாநந்த தேரரை சந்தித்து தனது பாராட்டை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக தாய்லாந்திலிருந்து பெரிய பிரித்தானியாவிற்கு செல்லும் வழியில் இலங்கையில் சிறிது நேரம் தரித்துவிட்டு சென்றார்.
அதே வருடம் மன்னர் Chulalongkorn தாய்லாந்தின் தபால் மற்றும் தொலை தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து விலகிவிட அப்பதவியை பொறுப்பேற்கும் எண்ணத்திலே இளவரசர் தாய்லாந்து திரும்பினார்.
அவர் தனது புதிய பதவியை மும்முரமாக மேற்கொண்டிருந்தபோது 1890 ஆம் ஆண்டு மன்னரை பதவி கவிழ்க்க முயற்சி செய்தார் என அபாண்டமாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இவ் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த இளவரசர் இந்தியாவிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஆறு ஆண்டுகளை கழித்தவர் பௌத்த துறவியாகும் எண்ணத்தோடு இலங்கை திரும்பினார்.
இலங்கை வந்த இளவரசர் அன்றைய காலப் பகுதியில் அமரபுர ஸ்ரீ சத்தம்ம மஹா நிக்காயாவின் பிரதான பொறுப்பிலிருந்த வஸ்கடுவ ஸ்ரீ சுபுதி மகா தேரரின் மாணவராக மாறினார்.
1896 ஆம் ஆண்டு இளவரசர் "ஜினாவரவன்ச" என்ற பெயரோடு பௌத்த மத துறவியாக மாறினார். என்றாலும் அன்றைய இலங்கையின் சுதேச மக்களால் "தாய்லாந்து இளவரச துறவி" என்றே பிரபல்யமாக அறியப்பட்டார்.
தனிமையான ஒரு வாழ்வை வாழ வேண்டும் என்ற நோக்கோடு 1900 ஆம் ஆண்டு கல்கொடியான தீவிற்கு வந்த இளவரசர் கிராமத்தவர்கள் அந்தத்தீவை பரிசாக வழங்குவதற்கு முன் அத்தீவிலே விபஸ்ஸன தியானத்தை மேற்கொள்வதற்காக அத்தீவை அடிக்கடி பயன்படுத்தினார்.
தாய்லாந்து மன்னரான Chulalongkornற்கு தனது மரியாதையை செலுத்தும் வகையிலே அத்தீவிற்கு அவர் "Chula Lanka" என பெயரிட்டதோடு அத்தீவிலே தாய்லாந்து கட்டட அமைப்பை ஒத்ததான தூபியொன்றையும் நிறுவினார்.
இளவரசர் பிரதான நிலப்பகுதியை அடையும் வகையில் அத்தீவிலிருந்து பாதை ஒன்றை அமைத்ததாகவும் ஆனால் அதன் பெரும்பாலான பகுதிகள் கடலரிப்பினால் அழிக்கப்பட்டு அதன் சில பகுதிகள் மட்டும் எஞ்சி இருப்பதாகவும் அத்தீவை சூழ வசிக்கும் கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
1905,1906ஆம் ஆண்டுகளில் பிக்குவாக வேண்டுமென்ற நோக்கோடு இலங்கை வந்திருந்த ஜெர்மன் நாட்டவரான "ஞானதிலோக தேரரோடு" தனது தீவை இளவரசர் பகிர்ந்து கொண்டார். அவர் பிற்காலத்தில் உலகமறிந்த துறவியாக மாறியதோடு "தொடந்துவ பொல்கஸ்துவ மடாலயத்தையும்" நிறுவினார்.
1911 ஆம் ஆண்டு ஜினாவரவன்ச என்ற பெயருடைய இளவரசர் கொட்டாஞ்சேனையிலிருந்த "தீபாதுத்தாராமய"ன் பிரதான பதவியிற்கு தெரிவுசெய்யப்பட்டார்.
அதே வருடம் ஞானாதிலோக தேரர் கல்கொடியான தீவின் பிரதான பிக்குவாக நியமிக்கப்பட்டார்.
என்றாலும் முதலாம் உலகப்போரின் போது ஜேர்மானியர்களுக்கு யுத்த உளவு தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். இதன் போது அத்தீவு முற்றுகையிடப்பட்டு மனிதர்கள் யாரும் வாசிக்க முடியாத இடமாக மாறியது.
அதே வருடம் தாய்லாந்து மன்னர் Chulalongkorn மரணித்ததனால் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக இளவரசர் தாய்லாந்து செல்ல வேண்டியேற்பட்டது. அங்கு அவர் சென்ற பிறகு தாய்லாந்து அரச குடும்பத்தோடு மீண்டும் இணையும்படி வற்புறுத்தப்பட்டார்.
வரலாற்று தகவல்களின்படி தாய்லாந்து மன்னரினால் இளவரசர் மீண்டும் இலங்கை திரும்புவதிலிருந்தும் தடுக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகின்றது. இளவரசர் 1935 மார்ச் 16ஆம் தேதி அன்று பாங்கொக் நகரில் மரணித்தார்.
கல்கொடியான தீவினுள் அமைக்கப்பட்ட தாய்லாந்து கட்டிட அமைப்பிலான தூபியும் ஏனைய தொல்பொருள் நினைவுச் சின்னங்களும் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட பாரிய சுனாமி அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு காலங்கள் கடந்ததனால் அவை கவனிப்பாறட்டும் உள்ளன.
இந்த தீவினுடைய அற்புதமான வரலாற்றை அறிந்து கொண்டவர்களுக்கு இத்தீவானது இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர, மதரீதியான,கலாசார, அரசியல் தொடர்பை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இத்தீவினையும் அது சார்ந்த இடங்களையும் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் தொல்பொருள் பெறுமதி மிக்க ஒரு இடத்தை பாதுகாத்ததாகவும், இத்தீவின் வரலாற்றிற்கும், தனித்திருந்து தியானம் செய்வதற்காக இந்த இடத்தை தெரிவு செய்த இளவரசரின் கதைக்கும் மரியாதை செலுத்தியதாகவும் அமையும்.
மூலம்:-Roar media Tamil
