குழந்தைகளை உரலில் இடித்துக்கொன்ற இலங்கையின் இறுதி மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன்




நாம் உலக வரலாற்றை எடுத்து நோக்குவோமாயின் அன்றைய மன்னர் கால ஆட்சியிலிருந்து தற்கால ஜனநாயக ஆட்சி நடைபெறும் காலம் வரை அதிகாரத்தில் இருக்கும் தரப்பு தன் எதிர்த்தரப்பை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொன்று தொட்டு நடைபெறும் ஒரு விடயமாகும்.

அதிலும் குறிப்பாக மன்னராட்சி காலத்தில் மன்னனுக்கெதிரான நிலைப்பாட்டில் ஒருவன் உள்ளான் என்று சந்தேகம் வந்தால் கூட அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் நிலையே காணப்பட்டது.

இலங்கை மன்னர் வரலாற்றை எடுத்து நோக்கினால் கூட அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் இடம்பெற்ற ஏராளமான சம்பவங்களை சுட்டிக்காட்டலாம்.

இலங்கை வரலாற்றின் இறுதி இராசதானியான கண்டி இராசதானியின் இறுதி மன்னனான ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் அளவுக்கு மீறிய ஆத்திரத்தினால் ஒரு குடும்பமே மிகக் கொடூரமாக கொல்லப்பட்டதையும் அவர் மயிர்க்கூச்செறியும் சம்பவத்தின் போது ஒரு குழந்தை வீரன் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்ததையுமே நாம் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

அன்றைய கண்டி இராச்சியத்தின் இறுதி மன்னனாக இருந்த ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னன் தென்னிந்தியாவின் வடுக பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதோடு தனக்கு கீழ் இருக்கும் தலைவர்கள் தன்னைக் கொன்றுவிட்டு இராச்சியத்தை கைப்பற்றி விடுவார்கள் என்று பயந்தான்.

அந்தப்பயத்தினால் ஏற்பட்ட அழுத்தத்தை தணிப்பதற்காக அவன் மதுவுக்கு அடிமையாகியதோடு சிறிய விடயங்களுக்குக்கூட கோபப்படக்கூடியவனாக இருந்தான்.

அந்தக்கோபம் அதிகரிக்கவே தனக்கு அச்சுறுத்தலாக வரக்கூடியவர்கள் என கருதிய கண்டியில் உள்ள கண்ணியமான குடும்பங்களை சேர்ந்தவர்களை கொல்வதன் மூலமோ அல்லது பலவந்தமாக தனது இராச்சியத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலமோ இல்லாமலாக்கினான்.

மன்னன் எப்போதும் தன்னைச்சூழ மதிப்புமிக்கவர்களே இருக்க வேண்டுமென விரும்பினான்.

இதனால் அவன் கரையோர மக்களையும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த பிக்குமாரையும் வெறுப்பாகவே பார்த்தான்.

அவன் கடுமையான தண்டனைகளை வழங்கக்கூடியவனாக இருந்ததோடு அதிலும் குறிப்பாக தாழ்நில மக்களுக்கும் தாழ்ந்த சாதியை சேர்ந்த மக்களுக்கும் மிகக் கொடூரமான தண்டனைகளை வழங்கினான்.

தன்னுடைய அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு எப்படி அந்த கொடூர தண்டனைகளை வழங்குகின்றார்கள் என்பதை ரசித்துப் பார்ப்பதற்காகவென்றே பத்திரிப்பு என்ற கட்டிடத்தையும் கட்டியிருந்தான்.

அவனால் வழங்கப்பட்ட கொடூர தண்டனைகளாக மூட்டுகளை அறுத்தல், கூரான கழுமரங்களில் கழுவேற்றுதல், யானையைக் கொண்டு தலையை மிதிக்கச் செய்தல், பெண்களின் கழுத்தில் பாரமான கற்களை இறுகக்கட்டி அவன் நகருக்கு மத்தியில் கட்டியிருந்த குளத்தில் மூழ்கடித்தல் என்பனவாகும்.

அவன் கொடூர சர்வாதிகாரியாக மட்டும் இருக்கவில்லை மாறாக கேவலமான பாலியல் வெறிபிடித்தவனாகவும் இருந்தான்.

கண்டி பிரதேசத்தில் இருந்த எந்த ஒரு அழகான பெண்ணும் அவனது கேவலமான நடவடிக்கைகளிலிருந்து தப்ப முடியாது.

மன்னன் தனது ஆட்சியை போர்த்துகீசர், ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் இறுதியாக தனது சொந்த அமைச்சர்களினதும் தொடர்ந்தேச்சையான பாரிய அடக்குமுறை தலையீடுகளுக்கு மத்தியிலேயே கொண்டு சென்றான்.

சிலவேளை மன்னன் தனது சுபாவத்திலும் மனநிலையிலும் அதிகம் முரட்டுத்தனமும் கொடூரமும்முடையவனாக மாறுவதற்கு அவனிடம் காணப்பட்ட அதீத சந்தேகமே காரணமாக இருந்திருக்கக்கூடும்.

அவனுடைய காலப்பகுதியிலே நாட்டு வழக்கத்தில் மேல்நாடு, கீழ்நாடு அல்லது உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடு அதிகம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

மன்னன் புதிதாக பிரேரித்த பதவிக்கு உயர் சாதியில் இருந்து மட்டுமே ஆட்களை தெரிவு செய்யும்படி உத்தரவிட்டான்.

இப்பதவிக்கு ஒரு தரப்பினரை மட்டும் உரித்தாக்குவதைக் கொண்டு இலங்கையிலுள்ள பௌத்தர்கள் மத்தியில் கடும் முரண்பாட்டை ஏற்படுத்தினான்.

மற்றைய சாதியைச் சேர்ந்த பிக்குமார் அனைவரும் கண்டியை சாராதவர்களாகவும் கரையோர பகுதிகளை சார்ந்தவர்களாகவுமே இருந்தனர்.

தனது ஆட்சியில் உயர் சாதியை சேர்ந்தவர்களை மட்டும் தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே மன்னன் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்தான்.

இதனால் ஏனைய பிக்குமார் மனரீதியாக கடும் விரக்திக்குள்ளானதோடு தமக்கான உயர் அர்ச்சனைக்காக வேண்டி வேறு இடங்களையும் தேட வேண்டியிருந்தது.

என்றாலும் மன்னன் அதை பொருட்படுத்தாமல் புதிதாக உருவாக்கிய பதவியின் அடிப்படையில் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களுக்கு புதிதாக மதகுருமார்களை நியமிக்கவும் இலங்கையிலுள்ள ஏனைய பிக்குமார் அனைவரும் அந்த அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்றும் விரும்பினான்.

இதனால் தாழ்ந்த சாதியைச்சேர்ந்த பிக்குமார் பர்மா, தாய்லாந்து பகுதிகளுக்கு சென்று அமரபுர, ரம்மன்னே போன்ற உப பிரிவுகளை நிறுவினார்கள்.

அவனுடைய அரச்சவையில் மூத்த அமைச்சராக இருந்தவனே எஹலபொலையாகும். 

அவன் இலங்கையின் இறுதி இராச்சியமான கண்டி இராச்சியத்தின் மிக முக்கியமான இடத்தை பெறுகின்றான்.

அவன் ஆங்கிலம்,பாலி, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தான்.

மாத்தளையின் உடசியாபத்துவ எஹெலபொலவில் பிறந்த அவன் மஹாவில பொல்வத்தவில் இருந்த தனது பரம்பரை வீட்டை விகாரையாக மாற்றியதோடு அதனை சூழ இருந்த நிலங்களையும் விகாரைக்கே அன்பளிப்பு செய்து விட்டான்.

அவனது மற்றொரு வீடான "செங்கடகல வலவ்வ" பிற்பட்ட காலத்தில் தடுப்பு காவல் சிறையாக பயன்படுத்தப்பட்டது.

எஹெலபொல அமைச்சராக நியமிக்கப்பட்டபோது அவனது எதிரியான மொல்லிகொட இரண்டாவது அமைச்சராக நியமிக்கப்பட்டான்.

எஹெலபொல மன்னனுக்கு மாற்றமான இயல்பை கொண்டிருந்ததோடு மக்களுக்கு அதிகம் உதவக்கூடியவனாகவும் இருந்தான்.

உதாரணமாக கூறுவதாயின் அக்காலத்தில் அதிகமான குழந்தைகள் அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் கொல்லப்படுவது சாதாரணமானதொரு விடயமாக இருந்தது. 

இதனால் எஹெலபொல இவ்வாறு குழந்தைகள் கொல்லப்படக்கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தான். 

மேலும் யாராவது அதிகமான குழந்தைகள் காரணமாக அந்த சுமையை தாங்க முடியாமல் அவதிப்படுபவர்களாக இருந்தால் அவர்களுக்கும் உதவக்கூடியவனாக இருந்தான்.

என்றாலும் எஹெலபொல, மன்னன் இரண்டாவது திருமணம் முடிப்பதற்கு உதவவில்லை என்பதோடு நதா தேவாலயத்தை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற மன்னனின் தீர்மானத்திற்கு எதிராகவும் இருந்தான்.

இக்காரணங்களினால் மன்னன் எஹெலபொலவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கவில்லை.

எஹெலபொல வரியை சேகரித்து வருவதற்காக சப்ரகமுவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

அதேநேரம் எஹெலபொலவின் மனைவியான எஹெலபொல குமாரிஹாமி மீது மன்னன் மையல் கொண்டிருந்தான்.

மன்னனுக்கும் எஹெலபொலவிற்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த தருணம் பார்த்துக் கொண்டிருந்த மொல்லிகொட எஹெலபொல மன்னனுக்கு அனுப்பிய கடிதங்களை மறைத்து வைத்ததோடு மன்னனின் இரண்டாவது திருமணத்தின்போது எஹெலபொலவால் மன்னனுக்கு பரிசளிக்கவென செய்யப்பட்ட தங்க கிரீடமும் வாளும் மன்னனுக்கு பரிசளிக்கவன்றி எஹெலபொல மன்னனாக முடிசூடும்போது அணியவே செய்யப்பட்டதாகும் எனவும் மன்னனிடம் பற்றவைத்தான்.

எஹெலபொலவின் துரோகம் பற்றிய செய்திகள் நாளாந்தம் மன்னனின் காதுகளை சென்றடைந்தன.

எஹெலபொல தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மாளிகைக்கு வந்து விளக்கமளிக்கும்படி மன்னன் கட்டளையிட்டிருந்தும் கூட அவன் வரவில்லை.

ஆனால் மன்னன் அனுப்பிய அக்கடிதங்கள் எஹெலபொலவிற்கு போய் சேரவில்லை என்றும் மொல்லிகொடவே அக்கடிதங்களுக்கு பதில் கடிதம் அனுப்பியதாகவும் சொல்லப்படுகின்றது.

இதனால் கடும் கோபமடைந்த மன்னன் உடனடியாக எஹெலபொலவை பிரதான அமைச்சர் என்ற பதவியிலிருந்து நீக்கிவிட்டு மொல்லிகொடவை அப்பதவிக்கு நியமித்ததோடு 1814 ஆம் ஆண்டு மே மாதம் எஹெலபொலவை கைது செய்து கொண்டுவரும்படி சப்ரகமுவவிற்கு ஒரு படையையும் அனுப்பினான்.

இதையறிந்துகொண்ட எஹெலபொல மன்னனிடமிருந்து தப்பி தனது கூட்டாளிகளோடு கொழும்பிலே ஆங்கிலேயரிடம் அடைக்கலம் புகுந்தான்.

எஹெலபொலவின் இச்செயலால் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற மன்னன் அவனை பழிவாங்கும் நோக்கிலே அவனின் முழுக்குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்யும்படி உத்தரவிட்டான்.

ரொபர்ட் நொக்ஸ் தனது டைரியில் குறிப்பிடும் பொழுது "சிங்கள மன்னர்கள் காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தையும் கைது செய்வது அக்கால வழக்கமாக இருந்ததாக குறிப்பிடுகின்றார்."

எஹெலபொலவின் குடும்பம், மனைவி, மற்றும் பிள்ளைகள் என்போர் செங்கடகலையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

1814 மே 17 அன்று அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அன்றைய தினம் காலை முழுக்குடும்பமும் நதா தேவாலயத்திற்கும் விஷ்ணு கோவிலுக்கும் இடையில் தலதா மெதுரவிற்கு அருகில் உள்ள தேவ சங்ஹிந்த என்ற இடத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.

இக்காட்சியை மன்னன் தனது மாளிகையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

முதலாவதாக மூத்த மகனான லொக்கு பண்டாரவே கொல்லப்பட வேண்டும்.

ஆனால் அவனோ முன்னால் வருவதற்கு தைரியமில்லாமல் தன் தாயிடம் ஓடிச் சென்று அவளது சாரியைப் பிடித்து தொங்கிக்கொண்டு அழுது கொண்டிருந்தானாம்.

அப்போது எஹெலபொல குமாரிஹாமி தனது பிள்ளைகளைப் பார்த்து "பயப்படாதீர்கள்! மன்னன் இரத்தவெறி பிடித்து அலைகின்றான். 

அவனது இரத்தவெறி எம்மை கொலை செய்வதைக்கொண்டே அடங்கும். இது உங்கள் தந்தைக்கான ஒரு ஆசீர்வாதமாகவும் இருக்கும்" எனக் கூறினாள்.

தனது அண்ணன் அழுது புலம்புவதை பார்த்த அவனது தம்பியான மத்தும பண்டார தனது தாயின் வீரம் செறிந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டு தைரியமாக முன்னால் வந்து தன் அண்ணனை பார்த்து "அண்ணனே பயப்படாதே! எப்படி சாக வேண்டுமென நான் உனக்கு காட்டுகிறேன்" என கூறியவன் தலையை வெட்டுபவரின் பக்கம் திரும்பி "நான் தயார் ஒரே தடவையிலேயே என் கழுத்தை வெட்டுங்கள்" என கர்வமாக கூறினானாம்.

அவனது தலை வெட்டப்பட்டு பூமியை தொட்ட நொடி ஒரு தேசிய நாயகன் உருவாகினான்.

அவனது வீரம் வரும் பல நூற்றாண்டுகளுக்கும் பேசப்படும்.

இவ் அனைத்து கொடூரங்களையும் தனது மாளிகையின் ஜன்னலின் ஊடாக எந்தவித சலனமுமின்றி பார்த்துக் கொண்டிருந்த மன்னனின் இரத்தவெறி அப்போதும் அடங்கி இருக்காததால் கொல்லப்பட்டவர்களின் உடல்களை உரலில் போட்டு அடித்து சிதைக்கும்படி எஹெலபொல குமாரிஹாமியிற்கு உத்தரவிட்டான்.

வேறு வழியின்றி மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அரிசி இடிக்கும் உலக்கையை கையில் எடுத்தவள் துக்கம் தாளாது சுயநினைவை இழந்து அப்படியே நிலத்தில் சரிந்து விழுந்தாள்.

பெண்கள் அனைவரையும் போகம்பரை குளத்தில் மூழ்கடிக்கும்படி கட்டளையிட்டான். 

இதனால் எஹெலபொல குமாரிஹாமி,அவளது இரு மகள்கள் மற்றும் அவளது மைத்துனி ஆகியோர் கழுத்தில் பெரிய கற்களால் கட்டப்பட்டு குளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர்.

இந்த ஈவிரக்கமற்ற செயல்களையெல்லாம் அவ்விடத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த "பலிபான திசாவை" துக்கமும் வேதனையும் தாங்க முடியாமல் அவ்விடத்திலேயே மூர்ச்சையாகி விழுந்து விட்டாராம்.

இதைப் பார்த்த மன்னன் திசாவை தன்னுடைய கட்டளைகளை ஏற்று செய்ய முடியாதளவுக்கு அவருடைய மனம் அதிகம் மென்மையாக இருப்பதாக கூறி அவரை உடனே அப்பதவிலிருந்து தூக்கி விட்டான்.

இந்த மிருகத்தனமான செயல்களைக் கண்ட செங்கடகல மக்களின் எந்த வீடுகளிலும் அடுத்து வந்த ஒரு வார காலத்திற்கு உணவுக்காக வேண்டி நெருப்பு மூட்டப்படவில்லையாம்.

மாறாக அவர்களது மனங்களே பற்றியெறிந்து கொண்டிருந்தது.

அந்தளவு தூரம் எஹெலபொலவின் குடும்பத்தினருக்கு நேர்ந்த கொடுமைகள் அவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன.

இதனால் மக்கள் மன்னருக்கெதிராக கலகம் செய்ததோடு பல இறந்த உடல்கள் நகரம் முழுவதும் குவிந்து கிடந்ததாம்.

மக்களின் எதிர்ப்பு அதிகரிக்கவே மன்னன் தன்னுடைய மாளிகையையும் ஏனைய பல இடங்களையும் தீ வைத்து எரித்துவிட்டு ஹங்குரன்கெத்தவிலுள்ள தன்னுடைய மறைவிடத்திற்கு தப்பிச்சென்று விட்டான்.

மக்களனைவரும் மன்னனின் கொடூர செயலுக்காக அவனை பழிவாங்க காத்துக்கொண்டிருந்ததோடு ஆங்கிலேயப்படை எப்போது வரும் என்று ஆவலோடு எதிர்பார்க்கவும் தொடங்கினர்.

அதே நேரம் 1814 ஆம் ஆண்டு மத்திய மலைநாட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ஆங்கிலேய வியாபாரக் குழுவொன்று உளவாளிகள் என சந்தேகிக்கப்பட்டு மன்னனின் உத்தரவிற்கு ஏற்ப பிடிக்கப்பட்டு அவர்களுடைய கை, கால்கள் வெட்டப்பட்டு அவ்வெட்டப்பட்ட உறுப்புக்கள் அவர்களுடைய கழுத்தை சூழ கட்டப்பட்ட நிலையில் மீண்டும் கொழும்பிற்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனால் ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்திற்கு எதிராக 1815 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று போர் பிரகடனம் செய்தனர்.

நீர்கொழும்பு, காலி, திருகோணமலை, மட்டக்களப்பிலிருந்து படையினர் அனுப்பப்பட்டதோடு ஆளுநர் சேர் ரொபர்ட் பிரௌன்றிக் தலைமையில் கொழும்பிலிருந்து ஒரு படையும் வந்தது.

இந்த யுத்தமானது ஆட்சியிலிருந்து மன்னனை துரத்துவதற்காகவேயன்றி கண்டி இராச்சியத்திற்கெதிராகவல்லவென்று எஹெலபொல உறுதியளித்ததனால் மொல்லிகொட போன்ற தலைவர்களும் கூட மன்னனுக்கெதிரான யுத்தத்தில் பங்கேற்றனர்.

ஆனால் மொல்லிகொட ஆட்சி செய்த சதர கோரளை தம்மால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக ஆங்கிலேயர் அறிவித்த போதுதான் தாம் பிழையாக வழிநடத்தப்பட்டிருக்கின்றோம் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.

1815 பிப்ரவரி 14 அன்று ஆங்கிலேயப்படை கண்டிக்கு அனுப்பப்பட்டவுடன் மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் தன் இரு மனைவிகளான மவுடி கண்ணம்மா மற்றும் வன்கட ரங்கம்மாள் ஆகியோரோடு மெதமஹநுவரவிற்கு தப்பிச்சென்றான்.

அவர்களோடு சேர்ந்து அவனது சகாக்களும் அங்கே தப்பிச் சென்றனர்.

ஆங்கிலேய படை ஜெனரலான ஜோன் டொவலி எஹெலபொல, மொல்லிகொட என்போரை உள்ளடக்கிய படையொன்றை மெதமஹநுவரவை நோக்கி படையெடுத்துச் சென்றார். 

ஆங்கிலேயப்படையும் அவர்களோடு இணைந்த இலங்கை தலைவர்களும் சேர்ந்து மன்னன் பதுங்கி இருக்கலாம் என சந்தேகித்த காட்டினுள் நீண்ட தூரத்திற்கு அலைந்து தேடினர்.

இறுதியாக ஒரு சிறுவனின் உதவியோடு மன்னன் தன் இரு மனைவியரோடு மறைந்திருந்த வீட்டை கண்டுபிடித்தனர்.

எக்னெலிகொட மொஹொட்டால கதவருகே சென்று கதவை திறக்கும்படி கட்டளையிட்டான். ஆனால் மன்னனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதனால் கடும் கோபமடைந்த எக்னெலிகொட கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய அங்கே பயத்தினால் அரண்டுபோயிருந்த மன்னரின் மனைவிமார் இருவரும் மற்றொரு தலைவரான டயசின் கைகளை பற்றிக்கொண்டு தம்மை விட்டுவிடும்படி கெஞ்சினர்.

மன்னனின் கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு வெளியே இழுத்த எக்னெலிகொட இவனை பன்றியைப் போல கட்டி இழுத்துச்செல்ல கயிறொன்றை தரும்படி சத்தமிட்டான்.

1815 பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று போமுரே அப்புரால ஆரச்சியின் இடத்தில் வைத்து மன்னன் கைது செய்யப்பட்டான்.

மன்னனும் அவனது மனைவிகளும் 1816 ஜனவரி 24ஆம் தேதி "கொல்பொலிஸ்" என்ற கப்பலில் வேலூருக்கு நாடு கடத்தப்பட்டனர்.

அங்கே பிரிட்டிஷ் படையின் உயர் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு திரிபுரா மன்னரின் மகனின் இடமான "பிளெட்சி ஹைதர்" மாளிகையில் வைக்கப்பட்டனர்.

17 வருட சிறைவாசத்திற்கு பிறகு 1832 ஜனவரி 30 ஆம் திகதி மன்னன் தனது 52வது வயதில் மரணித்தான்.

எஹெலபொலவின் குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமை போல வேறு யாருக்கும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக 1815 ஆம் ஆண்டு சிங்களவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் ஒரு சரத்து கொண்டுவரப்பட்டது.

இந்த உடன்படிக்கை மகுல்மடுவவில் வைத்து கைச்சாச்சிடப்படும் போது எல்லோராலும் மதிக்கப்பட்ட எஹெலபொலவும் கூட உடன் இருந்ததாக கூறப்படுகின்றது.

பின்னர் 1825 ஆம் ஆண்டு எஹெலபொல மொரிஷியஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டதோடு 1829 ஏப்ரலில் அங்கேயே மரணித்தான்.

அங்கு அவன் மொரிஷியஸ் குழந்தைகளுக்காக சிங்கள பாடல்களை இயற்றியதாகவும் சொல்லப்படுகின்றது.

அநேகமாக அவன் தன் குழந்தைகளை இழந்த சோகத்திலிருந்து மீண்டு வருவதற்காக அவற்றை இயற்றி இருக்கலாம்.

ஆக்கம்:- அல்தாப் ஹசன்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post